ADDED : ஜூலை 05, 2026 08:10 AM

போத்தனூர்: தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மத்திய அரசின் மானிய விலை யூரியா 128 டன் போலீசார் நடத்திய சோதனையில் சிக்கியது.
கோவை திருமலையம்பாளையம் அடுத்த தமனாம்பாறையிலுள்ள ஒரு தனியார் குடோனில், உரம் பதுக்கி வைத்திருப்பதாக, அப்பகுதி விவசாயிகள் க.க.சாவடி போலீசாருக்கு தெரிவித்தனர். சோதனையில் ஆயிரக்கணக்கான மூட்டைகளில், மத்திய அரசால் விவசாய பயன்பாட்டுக்கு மானியமாக வழங்கப்பட்ட யூரியா உரம் இருந்தது.
வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். குடோன் மற்றும் இரு லாரிகளில், 118 டன் உர மூட்டைகள் இருந்தன. ரொட்டிகவுண்டனூர் எனும் இடத்திலும், 10.98 டன் உர மூட்டைகள் இருந்தன. இரு இடங்களுக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.
போலீசார் கூறுகையில், 'கோவைபுதுாரை சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கு தமனாம்பாறையில் தோட்டம் உள்ளது. கேரளா பெரும்பாவூரை சேர்ந்த ஆஷிப் அலி என்பவர் கடந்தாண்டு குத்தகைக்கு எடுத்து, தொழிற்சாலை அமைத்துள்ளார். பிற மாநிலங்களிலிருந்து மானிய விலை உரத்தை வாங்கி பதுக்கி வைத்துள்ளார்' என்றனர்.
வேளாண் உதவி இயக்குனர் நமத்துல்லா கூறுகையில், ''43 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 128.98 டன் யூரியா உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. உரம் குறித்து ஆய்வக சோதனை நடத்தப்படும்,'' என்றார்.
நடவடிக்கை தேவை தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி அறிக்கை: அரசு வழங்கும் உரத்தை விவசாயிகளுக்கு வழங்காமல், திரவமாக மாற்றி கேரளத்துக்கு கடத்தி வருகின்றனர். இதனால் வரும் கழிவு நீரை பூமிக் குள் ஆழ்துளை கிணறு வழியாக வெளியேற்றி வந்துள்ளனர். மேலும் ஒரு பெரிய குடோனில் நுாற்றுக்கணக்கான டன்கள் அரசு மானிய விலை உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட இரண்டாவது குடோனில் ஆய்வு செய்ய வேண்டும்.
நுாற்றுக்கணக்கான லாரிகளின் வாயிலாக தினந்தோறும் கேரளத்துக்கு கடத்தப்படுவதை தடுக்கவும், குடோன்களில் உர முட்டைகள் பதுக்கி வைத்திருப்பதை சோதனை செய்து கண்டறியவும் வேண்டும்.
விவசாயிகளுக்கு மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் உரம் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரம் கடத்தலுக்கு துணை போகின்ற அதிகாரிக ளின் மீது அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, பழனிசாமி கூறியுள்ளார்.
