/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் நன்னெறி வேளாண்மை முறை: தோட்டக்கலைத்துறை அறிவுரை
/
தென்னையில் நன்னெறி வேளாண்மை முறை: தோட்டக்கலைத்துறை அறிவுரை
தென்னையில் நன்னெறி வேளாண்மை முறை: தோட்டக்கலைத்துறை அறிவுரை
தென்னையில் நன்னெறி வேளாண்மை முறை: தோட்டக்கலைத்துறை அறிவுரை
ADDED : அக் 21, 2025 08:10 PM
பொள்ளாச்சி: 'நன்னெறி வேளாண்மை முறையில், தென்னையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு செய்ய முடியும்,' என, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
பொள்ளாச்சியில், தென்னை மரங்களை பல வகையான பூச்சிகளும், நோய் கிருமிகளும் தாக்கி வருகின்றன. இதன் விளைவாக 20 முதல் 50 சதவீதம் வரை பயிர் இழப்பு ஏற்படுகிறது.
இன்றைய நவீன வேளாண்மையில், குறைந்த எண்ணிக்கையிலான பயிர் வகைகள் சாகுபடி மற்றும் உலகில் ஏற்படும் காலநிலை மாற்றத்தினால், பயிர்களில் பூச்சி நோய் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
பூச்சி நோய் தாக்குதலிலிருந்து பயிர்களை பாதுகாப்பதற்கு, ரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சானகொல்லிகள் பயன்படுத்தப்படுகிறது.
இதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், மண் மற்றும் தண்ணீர் பெரிய அளவில் மாசடைகின்றன. மண்ணில் வாழும் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அழிகின்றன.
உணவுப் பொருட்களின் ஊட்டச்சத்து மதிப்பு குறைகிறது; தென்னந்தோப்புகளில் கேடுகள் செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
மேலும் மகரந்த சேர்க்கை நடைபெறுவதற்கு காரணமான தேனீக்கள், எறும்புகள் போன்ற பூச்சிகள் அழிக்கப்படுவதனால், மகரந்த சேர்க்கை சரிவர நடைபெறாமல் தேங்காய் காய்ப்பு குறைந்து வருகிறது.
எனவே பூச்சி நோய்களை கட்டுப்படுத்துவதற்கு, சுற்றுச்சூழலுக்கு நட்புள்ள நன்னெறி பயிர் பாதுகாப்பு முறைகளை, விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
வடக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி கூறியதாவது:
தென்னை மரங்களின் தலைப்பாகத்தை தகுந்த இடைவெளியில் சுத்தம் செய்தல், பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலால், பட்டுப்போன தென்னை மரங்களை வெட்டி அகற்றுதல் வாயிலாக காண்டாமிருக வண்டுகள், சிவப்புக் கூன்வண்டுகள் மற்றும் எலிகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.
மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சிகளை பாதுகாத்தல். தென்னை மரங்களில் பாளைகள் வெளிவந்து பூக்கள் மலரத் தொடங்கியவுடன் தேனீக்கள், ஈக்கள், எறும்புகள், குளவிகள், கூன் வண்டுகள் அதிக அளவில் வருகின்றன.
இவை பூக்களில் சுரக்கும் தேன் மற்றும் மகரந்தங்களை உண்டு வாழ்கின்றன. இவைகள் வாயிலாக, தென்னை மரங்களில் மகரந்த சேர்க்கை சிறப்பாக நடைபெறுகிறது, காய்ப்பும் அதிகரிக்கிறது.
தேனீக்களுக்கு உணவாக தேவைப்படும் மகரந்தங்கள் மற்றும் பூந்தேன் ஆகிய வகைகளை, அதிக அளவில் உற்பத்தி செய்து தரக்கூடிய மலர் தாவரங்கள் தென்னந்தோப்புகளில் அதிக அளவில் வளர்க்க வேண்டும்.
இத்தகைய மலர் தாவரங்கள் இங்கு காணப்படுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் அதிக அளவிலான கலைக்கொல்லி மற்றும் பூச்சி மருந்துகள் பயன்படுத்துவதாகும்.
இவைகள் தேனீக்கள் போன்ற நன்மை செய்யக்கூடிய பூச்சிகளின் நடமாட்டத்தை பெருமளவில் குறைக்கின்றன.
பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை தாக்குப்பிடிக்க கூடிய தென்னை ரகங்களை, தேர்வு செய்து நடவு செய்தல் வேண்டும். நல்ல உருண்டை வடிவம் கொண்ட தேங்காய்களில் ஈரியோப்பைட் சிலந்தி மற்றும் கோரைப் பூச்சி தாக்குதல்கள் மிகவும் குறைவாக காணப்படுகிறது.
உயிரியல் கட்டுப்பாடு தென்னை மரம் பல்லாண்டு பயிராகவும், உயரமான மரமாகவும் இருக்கின்ற காரணத்தினால், அதை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள் தான் சரியான தேர்வாகும்.
இந்தமுறைகளை கடைப்பிடித்த காரணத்தினால், கருந்தலை புழுக்கள் மற்றும் செதில் பூச்சிகள் இப்பொழுது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன.
பூச்சிகளை தாக்கி அழிக்கக்கூடிய, பூஞ்சாளங்கள் பூச்சிகளின் மேல் தோல் வழியாக நேரடியாக பூச்சிகளின் உடலுக்குள் சென்று அங்கு நச்சுப் பொருட்களை உற்பத்தி செய்து அதன் வாயிலாக பூச்சிகளைக் கொல்கின்றன.
காண்டாமிருக வண்டுகளை, பச்சைமஸ்கார்டைன் பூஞ்சாளத்தின் வாயிலாக வெற்றிகரமாக கட்டுப்படுத்தலாம்.
காண்டாமிருக வண்டுகளின் இனப்பெருக்கம் நடைபெறும் பெருங்குழிகளில், இந்த பூஞ்சாளத்தை தெளிப்பதன் வாயிலாக, 85 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
சிலந்திப்பூச்சிகளை ஹிர்சுட்டிலா தம்சாணி என்னும் பூஞ்சாளத்தை கொண்டு கட்டுப்படுத்தலாம். டிரைகோடெர்மா ஹார்சியானம் என்னும் பூஞ்சாளத்தை பயன்படுத்தி தென்னையில் அடித்தண்டு அழுகல் நோய் மற்றும் சாறு வடிதல் நோய்களை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.