/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடகிழக்கு பருவமழைக்கு தோட்டக்கலைதுறை எச்சரிக்கை
/
வடகிழக்கு பருவமழைக்கு தோட்டக்கலைதுறை எச்சரிக்கை
ADDED : அக் 09, 2024 10:23 PM
பொள்ளாச்சி : வடகிழக்குப் பருவமழை துவங்கவுள்ளதால், பயிர்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தோட்டக்கலை துணை இயக்குநர் சித்தார்த்தன் அறிக்கை:
வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டை, கொத்தமல்லி, கத்தரி, மஞ்சள் போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு உரிய காலத்தில், பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில், காப்பீடு செய்ய வேண்டும்.
வயல்களில் அதிக நீர் தேங்காமல் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். மழை நேரத்தில் நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதலை தவிர்க்க வேண்டும்.
வயல்களில் போதிய பயிர்ப்பாதுகாப்பு மருந்துகள் தெளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்கள், கொடிகளின் அடிப்பகுதியில் மண் அணைக்க வேண்டும். தேங்கிய நீர் வடிந்ததும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் மருந்துகளை வேர்ப்பகுதியில் இட்டு, நோய் வராமல் தடுக்க வேண்டும்.
பசுமைக் குடில் மற்றும் நிழல்வலைக் குடில் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க வேண்டும். அருகில் மரங்கள் இருப்பின், கவாத்து செய்யலாம்.
வாழை மரத்துக்கு மண் அணைக்க வேண்டும். சவுக்கு, யூகலிப்டஸ் கம்புகளைக் கொண்டு முட்டுக்கொடுத்து, வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். 75 சதவீதத்துக்கும் மேல் முதிர்ந்த வாழைத்தார்களை அறுவடை செய்ய வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.