/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டல் ஊழியர் கொலை: சப்ளையருக்கு போலீஸ் வலை
/
ஓட்டல் ஊழியர் கொலை: சப்ளையருக்கு போலீஸ் வலை
ADDED : ஜூலை 21, 2025 11:07 PM

கோவை; மதுபோதையில், பரோட்டா மாஸ்டரை கொலை செய்த ஓட்டல் சப்ளையரை, போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சிறுகுடியை சேர்ந்தவர் நவீன், 40. கோவை உக்கடம் சாரமேடு பகுதியில் உள்ள பரோட்டா கடையில், கடந்த மூன்று மாதங்களாக மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். ஓட்டல் அருகில் உள்ள ஓட்டல் உரிமையாளருக்கு சொந்தமான ஓட்டுக்கட்டடத்தில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன், ஓட்டலில் சப்ளையராக ஒருவர் சேர்ந்தார். அவர், நவீன் உடன் அறையில் தங்கினார். நேற்று முன்தினம், நவீன் மற்றும் அந்நபர் இருவரும் சேர்ந்து மது அருந்தினர்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றிய நிலையில், அந்நபர் அங்கிருந்த காஸ் பர்னரை எடுத்து நவீனை தாக்கினார். இதில் நவீனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமடைந்தார். அந்நபர் அங்கிருந்து தப்பினார்.
நேற்று காலை நீண்ட நேரம், நவீன் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த ஓட்டல் உரிமையாளர், கதவை திறந்து பார்த்த போது அங்கு நவீன் பிணமாக கிடந்தார். அவர் அளித்த தகவலின் பேரில், கடைவீதி போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், நவீனுடன் தங்கியவர் தயாநிதி எனத் தெரிந்தது. அவர் எந்த ஊரை சேர்ந்தவர் உள்ளிட்ட விபரங்கள் தெரியவில்லை. அந்நபர் ஓட்டல் சப்ளையராக பணியில் சேரும் முன் கோவை ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவமனை, வாலாங்குளம் பகுதிகளில் சுற்றித்திரிந்ததும் தெரிந்தது.
இதையடுத்து தயாநிதியை பிடிக்க, மூன்று தனிப்படை ஏற்படுத்தப்பட்டது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு, அவரை தேடி வருகின்றனர்.