/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹோட்டலில் சேவை குறைபாடு; இழப்பீடு வழங்க உத்தரவு
/
ஹோட்டலில் சேவை குறைபாடு; இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : செப் 04, 2025 11:09 PM
கோவை; வடவள்ளி, ஜி.கே.எஸ்., அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். உப்பிலிபாளையம் மெயின் ரோடு, கிருஷ்ணா நகரில் உள்ள எஸ்.எஸ்., பிரியாணி ஹோட்டலுக்கு, 2025, ஜன., 14ல் குடும்பத்துடன் சாப்பிட சென்றார். தந்துாரி சிக்கன் மற்றும் இரண்டு முழு கிரில்டு சிக்கன் ஆர்டர் செய்தார். அவருக்கு எட்டு கோழி துண்டுகள் பரிமாறினர். ஆர்டர் கொடுத்த முழு கோழியில் உள்ள 'லெக் பீஸ்' தரப்படவில்லை. துண்டுகள் கணக்கில் முழு கோழி சப்ளை செய்தனர்.
'லெக் பீஸ்' குறித்து கேட்டபோது, சர்வர் எந்த பதிலும் அளிக்கவில்லை. மேலும், தந்துாரி சிக்கன் மற்றும் கிரில் சிக்கன் துண்டுகள் வெளிப்புறத்தில் குளிர்ச்சியாக இருந்தன. சிக்கன் துண்டுகள் சூடாக இல்லாதது பற்றி கேட்டபோது, ஹோட்டல் ஊழியர்கள், அவரை சூழ்ந்துகொண்டு மிரட்டியதால் அவமானம் ஏற்பட்டது.
இழப்பீடு வழங்கக்கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா பிறப்பித்த உத்தரவில், 'ஹோட்டல் நிர்வாகம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடாக 10,000 ரூபாய், வழக்கு செலவு 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.