/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு தேடி ரேஷன் பொருள் விநியோகம் காலிப் பணியிடங்களால் சிக்கல்
/
வீடு தேடி ரேஷன் பொருள் விநியோகம் காலிப் பணியிடங்களால் சிக்கல்
வீடு தேடி ரேஷன் பொருள் விநியோகம் காலிப் பணியிடங்களால் சிக்கல்
வீடு தேடி ரேஷன் பொருள் விநியோகம் காலிப் பணியிடங்களால் சிக்கல்
ADDED : ஆக 18, 2025 09:21 PM
அன்னுார்; 'போதிய கட்டமைப்பு வசதி இல்லாத தாயுமானவர் திட்டத்தால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம்,' என, ரேஷன் கடை பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டம் குறித்து புறநகர் ரேஷன் கடை பணியாளர்கள் சிலர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 50 சதவீத ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் மட்டுமே உள்ளனர். எடையாளர் பணியிடம் காலியாக உள்ளது.
இதில் ரேஷன் கடையில் இருந்து சரக்கு ஆட்டோவில், அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், எடை இயந்திரம் ஆகியவற்றை ஏற்ற வேண்டும். பின்னர் வீடு வீடாகச் சென்று விநியோகித்து விட்டு மீண்டும் வந்து ரேஷன் கடையில் இறக்க வேண்டும்.
இதற்கு ஏற்றுக்கூலி, இறக்கு கூலி ஆட்டோ வாடகை என 3,000 ரூபாய் ஆகிறது. சங்கத்திலிருந்து செலவிடும்படி அரசு கூறுகிறது. பல சங்கங்கள் சம்பளமே கொடுக்க முடியாத நிலையில் உள்ளன.
எனவே, அரசு இதற்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும். இத்திட்டம் செயல்படும் நாளில் ரேஷன் கடையை மூடிவிட்டுச் செல்ல வேண்டி உள்ளது. எடையாளர் இல்லாத இடத்தில் ஒருவரே பொருட்களை எடையிட்டு கருவிழி அல்லது கை ரேகை ஸ்கேன் செய்ய வேண்டி உள்ளது.
ஸ்கேன் செய்து பொருள் வழங்க 10 நிமிடம் ஆகிறது. ஒரு நாளில் அதிகபட்சம் 40 ரேஷன் கார்டுகளுக்கு மேல் வழங்க முடிவதில்லை. இதனால் ஒதுக்கப்பட்ட அனைவருக்கும் வழங்க முடிவதில்லை.
சில குறுகிய சந்துகளில் 20 கிலோ அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை தோளில் வைத்து வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது.
அரசு உடனடியாக காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் எடையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஆட்டோ வாடகையை ஒதுக்க வேண்டும். ஸ்கேன் செய்தல், எடை இடுதல் ஆகியவற்றில் உள்ள கள இடர்பாடுகளை களைய வேண்டும்.
இவ்வாறு, ஊழியர்கள் தெரிவித்தனர்.