/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அணை மதகை திறக்க முடியாததால் பவானி கரையோர வீடுகளில் வெள்ளம்
/
அணை மதகை திறக்க முடியாததால் பவானி கரையோர வீடுகளில் வெள்ளம்
அணை மதகை திறக்க முடியாததால் பவானி கரையோர வீடுகளில் வெள்ளம்
அணை மதகை திறக்க முடியாததால் பவானி கரையோர வீடுகளில் வெள்ளம்
ADDED : நவ 05, 2024 12:11 AM

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், கரட்டு மேடு பகுதியில், பவானி ஆற்றின் குறுக்கே கதவணையில், 10 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், நீரை வெளியேற்ற ஆறு மதகுகள் உள்ளன.
கதவணை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள ஆறு மதகுகளும் சரியாக பராமரிக்கப்படாததால், மதகு, அதைத்தாங்கியுள்ள இரும்பு துாண்கள் துருப்பிடித்த நிலையில் உள்ளன.
ஒரு வாரமாக குன்னுார் மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, ஆற்றில் வெள்ளம் அதிகரித்தது. மதகுகளை திறக்க முடியாததால், அணையின் கொள்ளளவை தாண்டி, நீர் தேங்கி, மதகுகளுக்கு மேல் வழிந்தது.
கரையோரம் உள்ள ராமசாமி நகர், இந்திரா நகர், ஸ்ரீரங்க ராயன் ஓடை ஆகிய பகுதிகளில், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. ஆட்களை பயன்படுத்தி மனித உழைப்பின் வாயிலாக மதகுகளை உயர்த்த முயன்றனர். ஒரு அடிக்கு மேல் உயர்த்த முடியாததால், முயற்சி கைவிடப்பட்டது.
'கன மழை எச்சரிக்கை இருந்தும், மதகுகளை மின்வாரிய அதிகாரிகள் சரியாக பராமரிக்கவில்லை. முன்கூட்டியே சிறிதளவாவது திறந்து வைத்திருந்தால், ஆற்றில் வெள்ளம் சென்றிருக்கும்; குடியிருப்புக்குள் வெள்ளம் புகுவதை தடுத்திருக்கலாம். அதிகாரிகளின் அலட்சியமே, சேதத்துக்குக் காரணம்' என, மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அணையில் நீர் நிரம்பி இருந்ததால், அழுத்தம் காரணமாக, மதகுகளை திறக்க முடியவில்லை' என்றனர்.