/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடி கட்டடங்கள் எப்படியிருக்கு! உறுதி செய்யும் பணியாளர்கள்
/
அங்கன்வாடி கட்டடங்கள் எப்படியிருக்கு! உறுதி செய்யும் பணியாளர்கள்
அங்கன்வாடி கட்டடங்கள் எப்படியிருக்கு! உறுதி செய்யும் பணியாளர்கள்
அங்கன்வாடி கட்டடங்கள் எப்படியிருக்கு! உறுதி செய்யும் பணியாளர்கள்
ADDED : மே 27, 2025 09:13 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி கட்டடங்களின் தன்மை எப்படி இருக்கிறது என, உறுதி செய்யப்பட்டு வருகிறது.
அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளை பள்ளிக்கு செல்லும் வகையில் மனதளவில் தயார் படுத்துவதற்காக, முன்பருவக் கல்வி அளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக, இரண்டு முதல், ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 205 அங்கன்வாடிகள் வாயிலாக, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இம்மையங்களுக்கு, கடந்த, 11 முதல் 25ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் அங்கன்வாடிகள் திறக்கப்பட்டது. பெற்றோர் தங்களது குழந்தைகளை, மீண்டும் அங்கன்வாடி மையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
தற்போது, பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அங்கன்வாடி கட்டடங்களின் உறுதி தன்மை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டும் வருகிறது.
பொள்ளாச்சி நேதாஜி அரசு பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மைய கட்டடத்தில் மழைநீர் ஒழுகுவதால், குழந்தைகள், பள்ளி அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கூறியதாவது:
கட்டடத்தின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கட்டடத்தின் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, சாத்தியமான அபாயங்கள் அல்லது கட்டமைப்பு சிக்கல்கள் இருந்தால், அதனை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதேபோல, அங்கன்வாடி மையத்தில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதற்கான பணியை அந்தந்த அங்கன்வாடி பணியாளர்கள் மேற்கொண்டும் வருகின்றனர்.
இவ்வாறு, கூறினர்.