வெங்காய பயிர் கருகியது எப்படி? வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
வெங்காய பயிர் கருகியது எப்படி? வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
ADDED : ஜன 28, 2026 05:16 AM

அன்னூர்: பல ஏக்கர் வெங்காய பயிர் கருகிய தோட்டத்தில் வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
அன்னூர் அருகே ஆயி கவுண்டன் புதூரில், விவசாயி முருகசாமி தனது தோட்டத்தில், 20 ஏக்கரில் சிறிய வெங்காயம் பயிரிட்டு இருந்தார். கடந்த மாதம் வெங்காய பயிரில் நுனி கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து புளியம்பட்டியில் உள்ள தனியார் மருந்து கடையில் பூச்சி மருந்து வாங்கி கடந்த 2ம் தேதி 10 ஏக்கர் அளவுக்கு தெளித்துள்ளார். தெளித்த சில நாட்களில் 10 ஏக்கர் வெங்காய பயிறும் கருகியது. பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இது குறித்து வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையில் புகார் தெரிவித்தார். நேற்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி சக்திவேல், இணை பேராசிரியர்கள் கவிதா, மருதாசலம், பொங்கலூர் இணை பேராசிரியர் சரவணன் ஆகியோர்,தோட்டங்களில் வெங்காய பயிரை ஆய்வு செய்தனர். மண்ணையும் ஆய்வு செய்தனர்
விஞ்ஞானிகளிடம், விவசாயி முருகசாமி மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பேசுகையில், ' பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெங்காயம் கருகியது குறித்து அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்கவில்லை. தனியார் உரம் பூச்சி மருந்து கடையில் சோதனை நடத்தி ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்க வேண்டும். விரைவில் பரிசோதனை முடிவு வெளியிட வேண்டும்' என்றனர். விஞ்ஞானிகள் பேசுகையில், 'விரைவில் பரிசோதனை முடிவு வெளியிடப்படும். அதிக வீரியம் உள்ள மருந்து வெங்காய பயிருக்கு தெளிக்கப்பட்டுள்ளது' என்றனர்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் கோமதி, உதவி வேளாண் வணிக அலுவலர் வினோத் உள்பட பலர் பங்கேற்றனர்.
