/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சின்னியம்பாளையத்தில் 4 சென்ட் எவ்வளவு?
/
சின்னியம்பாளையத்தில் 4 சென்ட் எவ்வளவு?
ADDED : ஆக 08, 2025 08:41 PM
கோவை மாவட்டம், குருடம்பாளையம் கிராமம், மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் என்.ஜி.ஜி.ஓ., காலனி அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 2011ம் ஆண்டு மொத்தம் நான்கு தளங்களுடன், 12 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கட்டடம், 1,050 சதுரடி, யு.டி.எஸ்., 450 சதுரடியுடன் விற்பனைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம்?
-வைரவன், கோவை.
தாங்கள் கூறும் என்.ஜி.ஜி.ஓ., காலனி என்பது, குரும்பபாளையம் கிராமத்தில் பிரபலமானது. கடந்த, 15 வருடங்களில் சுமார், 40க்கும் மேற்பட்ட அபார்ட்மென்ட்கள் கட்டி உள்ளார்கள். வாடகை சுமார் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரம் வரும் எனில் இதன் மதிப்பு ரூ.40-45 லட்சமாகும்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி முனிசிபல் ஏரியாவில் ஒரு பிரபலமான தியேட்டருக்கு பின்புறம், 12 அடி சாலையை ஒட்டி சுமார் நான்கு சென்ட் இடம் விற்பனைக்கு வருகிறது. என்ன விலை கொடுத்து வாங்கலாம்?
-சந்தானம், ஊட்டி.
தாங்கள் கூறும் இடமானது ஊட்டி நகரின் முக்கிய பகுதியில் உள்ளதாக தெரிகிறது. ஒரே பின்னடைவு, 12 அடி பாதை இருப்பது. அகலம் கூடுதலாக இருந்தால் அந்த இடத்துக்கு பல சிறப்புகள் கிடைக்கும்.
இருப்பினும் இருக்கும் இடத்தை பார்த்து, அதை ஒரு 'கெஸ்ட் ஹவுஸ்' ஆக மாற்றி, சுற்றுலா வாசிகளுக்கு கொடுக்கும் முடியும் எனும்போது, அதன் மதிப்பை சென்ட் ரூ.13 லட்சம் முதல், 15 லட்சம் வரை கணக்கு செய்யலாம். அதில் இருக்கும் கட்டடம் ஆழ்குழாய், மின் இணைப்பு போன்றவற்றுக்காக தனியாக கணக்கெடுத்துக்கொள்ளவும்.
கோவை மாவட்டம், சின்னியம்பாளையம் கிராமத்தில், அவிநாசி ரோட்டில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவில் டி.டி.சி.பி., அங்கீகாரம் கொண்ட சைட்டான நான்கு சென்ட் இடம், 40 ஆண்டுகள் பழமையான ஓட்டு வீடு, 500 சதுரடி விற்பனைக்கு வருகிறது. என்ன விலை கொடுத்து வாங்கலாம்.
-வேலாயுதசாமி, கோவை.
அவிநாசி ரோடு என்பது தற்சமயம் கருமத்தம்பட்டி வரை உயிரோட்டம் உள்ள ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. அவிநாசி ரோட்டில் பஸ் நிறுத்தத்தில் இருந்து இறங்கி, 15 நிமிடத்தில் நடந்துசெல்லக்கூடிய ஒரு இடத்தில் இந்த நிலம் அமைந்துள்ளது என்பது வெகு விசேஷமானது. எனவே, சென்ட்க்கு ரூ.10 லட்சம் வரை யோசிக்காமல் கொடுக்கலாம்.
கோவை மாவட்டம், ஒத்தக்கால் மண்டபம் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில், இரண்டரை சென்ட் டி.டி.சி.பி., அனுமதி சைட் விற்பனைக்கு வருகிறது. என்ன விலை கொடுத்து வாங்கலாம்?
- சின்னத்தம்பி, ஒத்தக்கால்மண்டபம்.
டி.டி.சி.பி., அனுமதி என்பது ஒரு நல்ல அம்சமாகும். அதை தொடர்ந்து ஒரு நிலத்தை அல்லது மனையை வாங்குவது எப்போதும் நல்லது. அப்படிப்பட்ட மனை பஸ்போக்குவரத்துக்கு உதவுமாறு, 15 அல்லது, 20 நிமிடத்தில் பஸ் நிறுத்தத்தில் இருந்து சென்றடையும் வண்ணம் இருக்கும்பொழுது, அதற்கு என்றுமே கிராக்கி குறையாது. எனவே, இந்த இடத்தை ரூ.8 லட்சம் முதல், 9 லட்சம் வரை கொடுத்து வாங்கலாம்.
-தகவல்:
ஆர்.எம்.மயிலேறு,
கன்சல்டிங் இன்ஜினியர்.

