'நாளைக்கு படிக்கலாம்' என்ற எண்ணத்தை மாற்றுவது எப்படி?
'நாளைக்கு படிக்கலாம்' என்ற எண்ணத்தை மாற்றுவது எப்படி?
ADDED : பிப் 18, 2026 05:39 AM
ப ரீட்சைக்குப் படிக்க வேண்டும் என்று நினைப்போம், ஆனால் கடைசி நிமிடம் வரை புத்தகத்தைத் திறக்க மாட்டோம். வீட்டுப்பாடம் எழுத அமருவோம், ஆனால் போனைப் பார்த்துக்கொண்டே இருப்போம்.
இதை நாம் பெரும்பாலும் 'சோம்பேறித்தனம்' என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால், தள்ளிப்போடுதல் என்பது சோம்பேறித்தனம் அல்ல. அது முழுக்க முழுக்க மனநிலை சார்ந்த விஷயம்.
சோம்பேறித்தனத்திற்கும் தள்ளிப்போடுவதற்கும் வித்தியாசம் உண்டு. சோம்பேறிக்கு அந்த வேலையைச் செய்ய விருப்பமே இருக்காது. ஆனால், தள்ளிப்போடுபவருக்கு அந்த வேலையைச் செய்ய விருப்பம் இருக்கும்; ஆனால் அதைத் தொடங்குவதில் ஒரு சிக்கல் இருக்கும்.
ஒரு வேலையைத் தள்ளிப்போடுவதற்கு முக்கியக் காரணம் 'இந்தப் பாடம் மிகவும் கடினமாக உள்ளதே, எங்கே ஆரம்பிப்பது?' என்ற மலைப்பு. இந்த பயத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளவே மனம், 'பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று அந்த வேலையைத் தள்ளிப்போடுகிறது.
'ஸ்விஸ் சீஸ் மெத்தட்' ஒரு பெரிய பாறை போல இருக்கும் வேலையை, சிறிய துண்டுகளாக உடைப்பதே சிறந்த வழி. இதை 'ஸ்விஸ் சீஸ் மெத்தட்' (Swiss Cheese Method) என்று கூறுகிறார்கள்.
முழு புத்தகத்தையும் படித்து முடிக்க வேண்டுமே' என்று நினைத்தால் பயம் வரும். 'இப்போதைக்கு 10 நிமிடம் மட்டும் படிப்பேன்' அல்லது 'இந்த ஒரு பக்கத்தை மட்டும் வாசிப்பேன்' என்று சிறிய இலக்கை வைக்க வேண்டும். இப்படிச் சிறிது சிறிதாகப் படிக்கும்போது, அந்தப் பெரிய வேலை எளிதாகிவிடும்.
எங்கே அமர்ந்து படிக்கிறோம் என்பது உங்கள் மனநிலையைத் தீர்மானிக்கும். படுக்கையில் படுத்துக்கொண்டே படிப்பது அல்லது கவனத்தைத் திசை திருப்பும் பொருட்களுக்கு அருகில் அமர்வது தள்ளிப்போடும் மனநிலையைத் தூண்டும்.
நேர்மறையான எண்ணம் நான் எப்பவுமே இப்படித்தான், என்னால் நேரத்திற்கு எதையும் முடிக்க முடியாது' என்று எண்ணாமல், 'இப்போதே என் பாடங்களை படிக்க தொடங்குகிறேன்' என நேர்மறையாக எண்ண வேண்டும்.
படிப்பைத் தள்ளிப்போடுவது என்பது உங்கள் திறமைக்குறைவு அல்ல. அது ஒரு பழக்கம் மட்டுமே. 'நாளை செய்வோம்' என்று சொல்லாமல், 'இப்போதே செய்வோம்' எனத் தொடங்கினால் நிச்சயமாக வெற்றி பெறலாம்.
