/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறந்த பொறியாளரை தேர்வு செய்வது எப்படி?
/
சிறந்த பொறியாளரை தேர்வு செய்வது எப்படி?
ADDED : செப் 28, 2024 05:09 AM

பல லட்சம் ரூபாயில் கனவு இல்ல ஆசையை நிறைவேற்றும் இல்ல உரிமையாளர்கள், பொறியாளர்களை தேர்வு செய்வதில் கவனம் தேவை.
இல்லையேல், கட்டடம் கட்டுவதில் காலதாமதம், தரமின்மை என பொருளாதார சிக்கல்களை மட்டுமின்றி, மனரீதியான பிரச்னைகளுக்கும் ஆளாக நேரிடும்.
கட்டுமான பொறியாளரை தேர்வு செய்வது எப்படி என, விளக்கம் அளிக்கிறார் அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க கோவை மைய முன்னாள் தலைவர் கணேஷ்குமார்.
அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...
கட்டுமான பொறியாளர் 'டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங்' படித்து, ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக அல்லது 'பேச்சுலர் ஆப் சிவில் இன்ஜினியரிங்' படித்து இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருத்தல் மிகவும் அவசியம். குறிப்பாக, வீடு கட்டும் துறையில் அனுபவம் இருப்பின் மிகவும் நல்லது.
நம்பகத்தன்மை வேண்டும்
கட்டடம் கட்டுவதற்கு தேவையான, தொழில்நுட்ப வரைபடங்களை சரியான தொழில்நுட்ப வல்லுனரின் ஆலோசனைப்படி தயார் செய்து, கட்டுமானத்தை எழுப்புபவராக இருக்க வேண்டும். கட்டட வேலைக்கு மத்தியில், வீட்டு உரிமையாளரிடம் நம்பகத்தன்மை பெற்றவராக இருப்பது அவசியம்.
அந்தந்த பகுதியில் உள்ள கட்டுமான பொறியாளர்களை வைத்து, கட்டுமானம் மேற்கொள்வது நல்லது. கட்டுனரை முடிவு செய்ய, ஒரே நிலையில் உள்ள பொறியாளர்களிடம் 'கொட்டேஷன்' பெற வேண்டும். அப்போதுதான் ஒப்பீடு சரியாக இருக்கும்.
விலை விபரம் முக்கியம்
சரியான விலை விபரங்களை பெற்றுக்கொள்வது நலம். கட்டுமான பொறியாளர் தன்னுடைய நிர்வாகத்தில் உள்ள, அனைத்து தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கு இழப்பீடு காப்பீடு பெற்றவராக இருக்க வேண்டும்.
நகர ஊரமைப்புத்துறையில், பதிவு பெற்ற கட்டுமான பொறியாளராக இருந்தால் நல்லது. நமக்காக நாம் அமைக்கும் கனவு இல்லம் மிகவும் உணர்வு பூர்வமானது.
எனவே, கனவு இல்ல கட்டுமானத்தில் இணைந்துள்ள அனைத்து பொறியாளர்கள், தொழிலாளர்களிடம், அன்பு பாராட்டும் அணுகுமுறையை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.