/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் வெள்ளை ஈ கட்டுப்படுத்துவது எப்படி?
/
தென்னையில் வெள்ளை ஈ கட்டுப்படுத்துவது எப்படி?
ADDED : மார் 20, 2025 05:34 AM
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், தென்னையில் வெள்ளை ஈ குறித்த விழிப்புணர்வு முகாம், மாதம்பட்டி தண்ணீர் பந்தலில் உள்ள குழந்தைவேலு என்பவரின் தோட்டத்தில் நடந்தது.
தொண்டாமுத்தூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நந்தினி தலைமை வகித்தார். வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, தமிழ்நாடு வேளாண் பல்கலை., பூச்சியியல் துறை பேராசிரியர் செங்கோட்டையன் அளித்த ஆலோசனைகள்:
l மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களை, மரங்களுக்கு இடையில் தொங்க விடலாம் அல்லது 6 அடி உயரத்தில், மரங்களைச் சுற்றியும் கட்டி வெள்ளை ஈக்களை அழிக்கலாம். மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களாலான ஒட்டுப்பொறிகள் மீது, விளக்கெண்ணையை பூச வேண்டும்.
l விசைத்தெளிப்பான் கொண்டு, மிக வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கட்டுப்படுத்தலாம். என்கார்சியா ஒட்டுண்ணி குளவிகள் உள்ள, தென்னை ஓலைகளை ஏக்கருக்கு, 10 இலை துண்டுகள் வீதம், தாக்கப்பட்ட ஓலைகளின் மீது இணைத்து கட்டுப்படுத்தலாம்.
l கிரைசோபிட் அல்லது அப்பர்டோக்கிரைசா அஸ்டர் என்ற இரை விழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 400 வீதம் தாக்கப்பட்ட ஓலைகளில் மீது இணைத்து கட்டுப்படுத்தலாம்.
l சுருள் இலை ஈக்களின் தாக்குதலில், பின் விளைவாக ஏற்படும் கரும்பூசணத்தை கட்டுப்படுத்த ஒரு கிலோ மைதா மாவை, 5 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அதன் பின், 20 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
l விளக்குபொறியினை ஏக்கருக்கு இரண்டு வீதம் மாலை, 6:00 முதல் இரவு, 10:00 மணி வரை ஒளிரச் செய்ய வேண்டும். வேப்ப எண்ணெய் லிட்டருக்கு 30 மி.லி., என்ற வீதத்தில் கலந்து நேர் வழியாக செலுத்தலாம்.
இவ்வாறு, அவர் ஆலோசனை வழங்கினார்.
இம்முகாமில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.