ADDED : பிப் 25, 2026 06:54 AM

சூலுார்: மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் ஓட்டளிப்பது எப்படி என்பது குறித்து சூலுார் வட்டாரத்தில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்தல், ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சூலுார், சுல்தான்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டளிப்பது குறித்து, வாகன பிரசாரம் நடக்கிறது. சூலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார், துணை தேர்தல் பிரிவு துணை தாசில்தார் நாட்ராயன் ஆகியோர் பிரசாரத்தில் பங்கேற்று விளக்கம் அளிக்கின்றனர்.
வாகன பிரசாரத்தில், வேட்பாளர் பெயர் மற்றும் சின்னத்துடன் இருக்கும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், யாருக்கு ஓட்டளிக்க விரும்புகிறோமோ அந்த வேட்பாளரின் பெயருக்கு அருகில் உள்ள பட்டனை அழுத்தி ஓட்டளிக்க வேண்டும்.
ஓட்டு பதிவானதை அறிந்து கொள்ள, 'பீப்' எனும் சப்தம் வரும் என, பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில்,' சூலுார் சட்டசபை தொகுதி முழுக்க, நகரம், கிராமம் என, அனைத்து பகுதியிலும் வாகன பிரசாரம் நடந்து வருகிறது.
பொதுமக்கள் அதை பயன்படுத்தி, பதட்ட மில்லாமல் ஓட்டளிப்பது எப்படி என, அறிந்து கொள்ளலாம். சந்தேகங்கள் இருந்தால், வாகனத்தில் வரும் ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்' என்றனர்.
