ADDED : பிப் 10, 2025 06:16 AM

கடந்த, 2023ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கோவில் கோபுரங்கள், உள் பிரகாரம், வெளிப்பிரகாரங்களில் வர்ணம் பூசும் பணிகள் நிறைவடைந்து, கோவில் ராஜகோபுரம், சன்னதிகோபுரங்கள், நுழைவாயில் என, கோவில் வளாகம் முழுவதும், புதுப்பொலிவு பெற்றுள்ளது.
கும்பாபிஷேகத்திற்காக, கோவில் முன்பு, 100 அடி அகலம், 80 அடி நீளம், 19½ அடி உயரத்திற்கு பிரம்மாண்டமான யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 49 வேதிகையும், 60 குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த யாகசாலை மண்டபத்திற்காக, மாயவரம் பகுதியில் இருந்து மூங்கில்கள், சவுக்கு மரங்கள் கொண்டுவரப்பட்டது. யாகசாலையில், ஒவ்வொரு தெய்வங்களுக்கான குண்டங்களிலும், அந்த தெய்வத்திற்கு உண்டான விலங்குகளின் உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளது. வண்ண காகிதங்கள் கொண்டு, யாகசாலை மண்டபம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
புதிய கலசங்கள்
கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, பட்டீஸ்வரர், பச்சைநாயகி, நடராஜர், தண்டபாணி, விநாயகர் உள்ளிட்ட 6 தெய்வங்களின் சன்னதி கோபுரங்களிலும், புதிய தங்க கலசங்களும், ராஜகோபுரத்தில், 5 புதிய தங்க கலசங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
புதிய கட்டடங்கள்
பார்க்கிங் பகுதியில், 100 பேர் அமரக்கூடிய வகையில், புதிய அன்னதானக்கூடம், 50 மாடுகளை வளர்க்கும் வகையில், கோசாலை, அன்னதான கூடத்திற்கு செல்வதற்காக, கான்கிரீட் சாலை, புதிய கழிப்பறை கட்டடம் ஆகியவைகள் கட்டப்பட்டுள்ளது. அதோடு, தனியார் பங்களிப்பில், புதிய தர்ப்பண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடங்கள், கும்பாபிஷேக தினத்தன்று திறக்கப்படுகிறது.
புனரமைக்கப்பட்ட தெப்பக்குளம்
கோவில் முன் உள்ள 16 கோணமுள்ள தெப்பக்குளம், மைசூர் அரசர் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்டது. பங்குனி உத்திர தேர்த்திருவிழாவின் ஒன்பதாம் நாளில், பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் ஆகியோர், அலங்கரிக்கப்பட்ட இந்திர விமான தெப்ப தேரில், இந்த குளத்தில், 11 சுற்றுகள் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். தற்போது, தெப்பக்குளம் புனரமைக்கப்பட்டுள்ளது.
புதிய கொடிமரம்
கோவிலில் இருந்த பழைய கொடிமரம் சேதமடைந்ததால், கடந்த ஆண்டு கேரளா மாநிலம், பாலா பகுதியில் இருந்து தேக்கு மரம் கொண்டுவரப்பட்டு, கொடிமரம் தயார் செய்யப்பட்டது. கடந்த வாரம், 47 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
100 கிலோ வெள்ளி
பச்சை நாயகி அம்மன் சன்னதியின் மரக்கதவில், 30 கிலோ வெள்ளியிலான தகடு பொருத்தப்பட்டுள்ளது. 11.20 கிலோவில் காமதேனு உருவாக்கப்பட்டுள்ளது. 28 கிலோ வெள்ளியில், நடராஜர் சன்னதி பீடம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியறையில், வெள்ளியிலான ஊஞ்சல் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 100 கிலோ வெள்ளியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

