/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனித-வனவிலங்கு மோதல் அதிகரிப்பு; வனத்துறையிர் விழிப்புணர்வு
/
மனித-வனவிலங்கு மோதல் அதிகரிப்பு; வனத்துறையிர் விழிப்புணர்வு
மனித-வனவிலங்கு மோதல் அதிகரிப்பு; வனத்துறையிர் விழிப்புணர்வு
மனித-வனவிலங்கு மோதல் அதிகரிப்பு; வனத்துறையிர் விழிப்புணர்வு
ADDED : டிச 11, 2025 05:04 AM

வால்பாறை: வால்பாறை அருகே, மனித - வனவிலங்கு மோதல் தடுப்பு குறித்து, தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை மாவட்ட எல்லையில் வால்பாறை அமைந்துள்ளது. சிறந்த சுற்றுலா தலமாக வால்பாறை இருப்பதால், மாநிலம் முழுவதிலிமிருந்தும் தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர். மேலும், சோலையாறு அணை, பாலாஜி கோவில், மற்றும் பல்வேறு எஸ்டேட்டுகளில் பசுமையான காட்சிகளை சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர்.
தற்போது, யானை, சிறுத்தை உட்பட வனவிலங்குகள் அவ்வப்போது வால்பாறைக்கு நுழைந்து விடுகின்றன. இதனால், மக்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். இதற்கு தீர்வு காணவும் விரும்புகின்றனர்.
இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும், சமீப காலமாக வனவிலங்கு - மனித மோதல் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, எஸ்டேட் பகுதியில் நடமாடும் யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகளால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இந்த மோதலை தடுக்க, வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வால்பாறையில் கடந்த ஆறு மாதங்களில், யானை தாக்கி மூன்று பேரும், சிறுத்தை தாக்கி மூன்று குழந்தைகளும் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், மனித - வன விலங்கு மோதலை தடுக்கும் வகையில், எஸ்டேட் தொழிலாளர் மத்தியில் வனத்துறை சார்பில், பல்வேறு காலகட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, வால்பாறை வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணா தலைமையில், எஸ்டேட் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரிகள் பேசியதாவது: வனப்பகுதியை ஒட்டி தேயிலை எஸ்டேட்கள் அமைந்துள்ளதால், வன விலங்குகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி வந்து செல்கின்றன.
சமீப காலமாக யானை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் முகாமிட்டுள்ளன. இது போன்ற சூழ்நிலையில், தொழிலாளர்கள் இரவு நேரத்தில் வெளியில் தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
மாலை, 6:00 மணிக்கு மேல், குழந்தைகளை வீட்டிற்கு வெளியில் விளையாட அனுமதிக்கக்கூடாது. யானைகளுக்கு பிடித்தமான வாழை, பலா, கொய்யா போன்றவைகளை தொழிலாளர் குடியிருப்பில் பயிரிடக்கூடாது.
அதே போல் சிறுத்தைக்கு பிடித்தமான நாய், ஆடு, மாடு, கோழிகளை குடியிருப்பில் வளர்க்ககூடாது. திறந்த வெளியில் மாமிசக்கழிவுகளை வீசக்கூடாது.
இவ்வாறு, தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், வனத்து றை அதிகாரிகள், வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள், எஸ்டேட் அதிகாரிகள், தொழிலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வனத்துறையினரின் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, வால்பாறை மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.

