/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர்களுக்கு 2 மாத தொகுப்பூதியம் விடுவிப்பு
/
ஆசிரியர்களுக்கு 2 மாத தொகுப்பூதியம் விடுவிப்பு
ADDED : டிச 11, 2025 05:05 AM
பொள்ளாச்சி: பள்ளி மேலாண்மை குழுவால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, அக்., நவ., மாதத்திற்கு உண்டான தொகுப்பூதியம் விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறையில், பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, 'டெட்' எனும் தகுதி தேர்வு பிரச்னையால், கடந்த மூன்றாண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அதிகப்படியான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இச்சூழலில், காலிப் பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில், பள்ளி மேலாண்மை குழு வாயிலாக, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதில், முதுகலை ஆசிரியர்களுக்கு 18,000 ரூபாய்; பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 ரூபாய்; இடைநிலை ஆசிரியர்களுக்கு 12,000 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
ஆனால், நிரந்தர ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதுபோல், ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில், அக்., மற்றும் நவ., மாதத்திற்கு உண்டான தொகுப்பூதியம் தற்போது, பள்ளிக் கல்வித்துறையால் விடுவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆசிரியர் படிப்புகளை முடித்து, தற்காலிக பணியாளர்களான இவர்களுக்கு, முறையாக சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது, அக்., நவ., மாதம் அந்தந்த பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

