/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நூறு நாள் வேலைத் திட்டம் முடங்கியது: கூலித்தொழிலாளர்கள் அதிர்ச்சி
/
நூறு நாள் வேலைத் திட்டம் முடங்கியது: கூலித்தொழிலாளர்கள் அதிர்ச்சி
நூறு நாள் வேலைத் திட்டம் முடங்கியது: கூலித்தொழிலாளர்கள் அதிர்ச்சி
நூறு நாள் வேலைத் திட்டம் முடங்கியது: கூலித்தொழிலாளர்கள் அதிர்ச்சி
ADDED : மார் 10, 2024 11:15 PM
பெ.நா.பாளையம்:கோவை மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் செயல்பட்டு வந்த, 100 நாள் வேலை
உறுதித் திட்டம் முடங்கியது. இத்திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு
கூலித்தொகை வராததால், இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதிமொழி திட்டத்தில் பணியாற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் கூலி வழங்கப்படாமல், இழுத்தடிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இது தமிழகத்தில் முதல் கட்டமாக, 2006 முதல் படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
ரூ.281 ஊதியம்
ஒவ்வொரு குடும்பத்திற்கும், 100 நாட்களுக்கு குறையாமல் வேலை வாய்ப்பினை அளிப்பதன் வாயிலாக, நிர்ணயிக்கப்பட்ட தரமான மற்றும் நிலையான சொத்துக்களை உருவாக்குதல் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டத்தில் வேலை பெற தகுதி உடையவர்கள். ஒரே ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும். எந்த ஒரு சாதாரண உடல் உழைப்பிலான வேலையையும் செய்வதற்கு விருப்பம் உடையவராக இருத்தல் வேண்டும். மேலும், 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் வேலை வாய்ப்பு பெற தகுதி உடையவர்.
இத்திட்டத்தில் ஆண், பெண் இரு நபர்களுக்கும், சம அளவிலான அதாவது, 281 ரூபாய் ஊதியம் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வேலையின் போது விபத்து ஏற்பட்டு முழுமையாக கை, கால் இழந்தாலும், உயிரிழப்பு ஏற்பட்டாலும், 25 ஆயிரம் ரூபாய் கருணை தொகை வழங்கப்படும். தேசிய மின்னணு நிதி மேலாண்மை முறை வாயிலாக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ஊதியம் நேரடியாக கொண்டு சேர்க்கப்படுகிறது.
நிறுத்தி வைப்பு
இத்திட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவற்றில் பணியாற்றும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு சரியான கால இடைவெளியில் கூலித்தொகை வழங்கப்படாததால், பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்தை கோவையில் உள்ள ஊராட்சிகளில் செயல்படுத்த வேண்டாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாக ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,' கடந்த புதன்கிழமை முதல் ஊராட்சிகளில், 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டாம் என, வாய்மொழி உத்தரவை, மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
இத்திட்டத்தில் பணியாற்றிய கூலித் தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக கூலித்தொகை வழங்கப்படவில்லை. மத்திய அரசு கூலித்தொகை விடுவிக்காததால், மேலும் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால், அவர்களுக்கு மேலும் சம்பளம் கொடுக்க முடியாதநிலை ஏற்படும். இதனால் மீண்டும், மீண்டும் சிக்கல் உருவாகும் என்பதால், 100 நாள் வேலை திட்டத்தை மாவட்ட நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது' என்றனர்.

