/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., மாணவரணி ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., மாணவரணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 15, 2025 12:14 AM

கோவை: அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பேச்சை கண்டித்து, தி.மு.க., மாணவரணி சார்பில் கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்கிற முழக்கத்துடன், கோவை மேட்டுப்பாளையத்தில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை, 7ம் தேதி துவக்கினார்.
அப்போது, இந்து சமய அறநிலையத்துறை நிதியில் கல்லுாரிகள் கட்டுவதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். இதற்கு தி.மு.க., கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அவரது பேச்சை கண்டித்து, தி.மு.க., மாணவரணி சார்பில், கோவை சிவானந்தா காலனியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதில், ஈரோடு எம்.பி., பிரகாஷ் பேசியதாவது:
அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி, மன அழுத்தத்தில் இருக்கிறார். 'ஓரணியில் தமிழ்நாடு' என்கிற இயக்கத்தில், 14 நாட்களில், ஒன்னேகால் கோடி உறுப்பினர்களை சேர்த்து விட்டோம். இந்த பதற்றத்தில், பழனிசாமி உளறுகிறார். வரும், 2031ல் அ.தி.மு.க., என்ற கட்சியே இல்லாமல் போய்விடும்.
இதுவரை, 3,500 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி உள்ளோம்; இன்னும், 1,000 கோவில்களுக்கு நடத்த உள்ளோம். அறநிலையத்துறைக்கு தி.மு.க., பாதுகாப்பாக இருக்கிறது; அதன் சொத்துக்களை மீட்டுள்ளோம். ரூ.1,500 கோடிக்கு மேல் தன்னார்வலர்கள் நிதி வழங்கியுள்ளனர். அதன் வாயிலாக கோவில்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. அத்துறையின் நிதியை படிப்புக்காக செலவு செய்தால் என்ன தவறு?
இவ்வாறு, அவர் பேசினார்.
மாநில மாணவரணி செயலாளர் ராஜிவ்காந்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், ரவி, முருகேசன், கோவை எம்.பி., ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.