அடிப்படை தேவைகள் அத்தனைக்கும் நான் கியாரன்டி; சபரி கார்த்திகேயன் உறுதி
அடிப்படை தேவைகள் அத்தனைக்கும் நான் கியாரன்டி; சபரி கார்த்திகேயன் உறுதி
ADDED : ஏப் 19, 2026 08:25 PM

போத்தனூர்:கிணத்துக்கடவு தொகுதி தி.மு.க. வேட்பாளர் சபரிகார்த்திகேயன் தொண்டாமுத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மகாலட்சுமி கோவில் அண்ணா நகர், விநாயகர் கோவில் மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த மூன்று சட்டசபை தேர்தலிலும் இத்தொகுதியில் ஒரே கட்சியை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளித்து வெற்றி பெற செய்துள்ளீர்கள். குறிப்பாக தற்போதைய எம்.எல்.ஏ. இரு முறை இத்தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்.
அமைச்சர் பதவியும் வகித்தவர். இருப்பினும் தொகுதியின் அடிப்படை தேவைகள் முழுமையடையவில்லை. அவற்றை சீரமைக்க தற்போது உங்களிடம் வாய்ப்பு கேட்டு வந்துள்ளேன்.
இந்த ஒருமுறை உதயசூரியனுக்கு வாய்ப்பளித்து வெற்றி பெற செய்யுங்கள். நமது தொகுதியில நிச்சயம் நீங்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துவேன். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து செய்து கொடுக்கும் உங்கள் வீட்டு பிள்ளையாக இருப்பேன்.
மக்கள் சேவையில் நீண்ட அனுபவமும் தொகுதியின் தேவை என்னவென்பதை நன்கு அறிந்தவனாகவும், உங்கள் முன் தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்டு வந்துள்ளேன்.
கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என பல்வேறு காரணிகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதை மத்திய அரசே தங்களின் புள்ளி விபரத்தில் தெரிவித்துள்ளது.
எதிர்கட்சியினரே நற்சான்றிதழ் வழங்கும் ஆட்சி நமது திராவிட மாடல் ஆட்சி. அது தொடர வேண்டும். தமிழகம் மீண்டும் வெற்றிப்பாதையில் நடைபோட்டு மக்கள் மனங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
இதற்கு ஓர் உதாரணமான அறிவிப்புதான், மகளிருக்கான தேவையை நிறைவேற்றும் எட்டாயிரம் ரூபாய் வழங்கும் இல்லத்தரசி திட்டம். இதுபோன்று அறிவிக்கப்பட்ட திட்டங்களும், அறிவிக்கப்படாத பல திட்டங்களும் உங்களை வந்தடைய ஆதரவளியுங்கள். உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
