
ஐயப்பன், வக்கீல், பொள்ளாச்சி: தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் சிதைவை தடுக்கும் சட்டம், 1959, பிரிவு 4ன் படி, அனுமதி இல்லாமல், பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி விளம்பரங்கள், ஆட்சேபனைக்குரிய வரைபடம், சின்னங்கள், அங்கீகரிக்கப்படாத விளம்பரங்கள் செய்தால், குறைந்தபட்சம் 200 முதல் அதிக பட்சம் ஆயிரம் ரூபாய் வரை அபராதமும், 3 மாதங்கள் முதல், ஓராண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். பொறுப்பு உணர்ந்து, சட்டத்தை மதித்து செயல்பட்டால், நகரின் அழகை பாதுகாக்கலாம்.
-மோகன், ஆவலப்பம்பட்டி: விளம்பரத்துக்காக பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுகின்றனர். ஆனால், முறையான அனுமதி பெறாமலும், அனுமதி இல்லாத இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டுகின்றனர். பொது இடங்களான, பஸ் ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் போஸ்டர் ஒட்டுவதை தவிர்க்க வேண்டும். அந்தந்த கிராம ஊராட்சி பகுதிகளின் முக்கிய இடங்களில் மக்களுக்கு தேவையான தகவல்கள் இருந்தால் மட்டும் விழிப்புணர்வு அறிவிப்பு வைக்க வேண்டும். அத்துமீறலுக்கு கடிவாளம் போட வேண்டும்.அப்போது தான், போஸ்டர்களால் அலங்கோலமாவதை தடுக்க முடியும்.
மூர்த்தி, வால்பாறை: பயணியர் நிழற்கூரையை சுற்றிலும், அரசியல் கட்சியினர் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது. அரசு சுவர்களில் இனி யாரும் விளம்பரம் செய்யாத வகையில், போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அத்துமீறி போஸ்டர் ஒட்டுபவர்கள் மீதும், சுவர் விளம்பரம் செய்வோர் மீதும், துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதோடு, அபராதமும் விதிக்க வேண்டும்.நடவடிக்கைகள் பாய்ந்தால் மட்டுமே, அத்துமீறலை கட்டுப்படுத்த முடியும் என்பதால், அதிகாரிகள் களமிறங்க வேண்டும்.
கார்த்திகேயன், உடுமலை: உடுமலை பகுதிகளில், அரசு சுவர்கள் மற்றும் பொது இடங்களில் அதிகளவு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகரித்து வருகிறது. பிளக்ஸ் பேனர்கள் காற்றுக்கு தாங்காமல் கீழே விழுகின்றன. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பிளக்ஸ் வைப்பதையும், போஸ்டர் ஒட்டுவதையும் கட்டுப்படுத்த வேண்டும்.