பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
UPDATED : அக் 24, 2025 11:43 AM
ADDED : அக் 24, 2025 11:32 AM

திருவள்ளூர்: பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 4,500 கன அடியில் இருந்து 6,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அந்த வகையில், திருவள்ளூரில் உள்ள பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 4,500 கன அடியில் இருந்து 6,500 கன அடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
எனவே, பூண்டி ஏரி நீர் வெளியேறும் கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோரங்கள் மற்றும் உபரி நீர் கால்வாய் ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
* பூண்டி ஏரியின் மொத்தக் கொள்ளளவில் 76 சதவீதம் இப்போது தண்ணீர் தேங்கி உள்ளது.
ஏரிக்கு விநாடிக்கு 6,970 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 6,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
* புழல் ஏரியின் மொத்தக் கொள்ளளவில் 82 சதவீதம் தண்ணீர் தேங்கி உள்ளது. விநாடிக்கு 432 கன அடி தண்ணீர் வருகிறது. 709 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
* செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவில் 80 சதவீதம் தண்ணீர் தேங்கி உள்ளது. விநாடிக்கு 1,196 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. விநாடிக்கு 945 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
* தேர்வாய் கண்டிகை ஏரியில் 87 சதவீதம் தண்ணீர் தேங்கி உள்ளது.
விநாடிக்கு 50 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
* சோழவரம் ஏரியில் 55 சதவீதம் மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது. விநாடிக்கு 830 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

