/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோளம் விதைப்புக்கு ஏற்ற சித்திரைப் பட்டம்
/
சோளம் விதைப்புக்கு ஏற்ற சித்திரைப் பட்டம்
ADDED : மார் 15, 2024 08:08 PM

பொள்ளாச்சி;கோவை மாவட்டத்தில், 75 ஆயிரம் ஏக்கரில், சோளம், கம்பு, ராகி, மக்காச்சோளம் உள்ளிட்ட சிறு தானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இது குறித்து, வேளாண் இணை இயக்குனர் பெருமாள்சாமி அறிக்கை:
தற்போது முதல் போக சாகுபடி பயிர்கள் அறுவடை முடிவுற்றுள்ளது. எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில்சித்திரைப்பட்டத்தில் நீர்ப்பாசனத்தில், சோளம் சாகுபடி துவங்க உள்ளது.
சித்திரை பட்டத்துக்கு ஏற்ற, கோ-32 மற்றும் கே-12 ரகங்கள், 110 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும்.
இறவை மற்றும் மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது. ஏக்கருக்கு 1,240 கிலோ தானிய மகசூல் கிடைக்கும். தட்டு மகசூல் 4,580 கிலோ கிடைக்கும். போதிய அளவு தொழு உரம் இட்டு, அடியுரமாக ஏக்கருக்கு, 40 கிலோ யூரியா, 110 கிலோ சூப்பர் பாஸ்பேட்டு, 30 கிலோ பொட்டாஷ் உரங்களை கலந்து, கடைசி உழவில் இட வேண்டும்.
விதைத்து, 15 மற்றும் 30 நாட்கள் கழித்து ஏக்கருக்கு, 20 கிலோ யூரியா என்ற அளவில் இருமுறை மேலுரமாக இட வேண்டும்.தேவையான உயிர் உரங்கள், நுண்ணுாட்ட கலவைகள் மாவட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளன.
தேவைப்படும் விவசாயிகள், வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

