/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தை பிறந்தால் வழி பிறக்கும்! தென்னை பிரச்னைகள் தீரும் என நம்பிக்கை ; பொங்கலை கொண்டாட விவசாயிகள் ஆர்வம்
/
தை பிறந்தால் வழி பிறக்கும்! தென்னை பிரச்னைகள் தீரும் என நம்பிக்கை ; பொங்கலை கொண்டாட விவசாயிகள் ஆர்வம்
தை பிறந்தால் வழி பிறக்கும்! தென்னை பிரச்னைகள் தீரும் என நம்பிக்கை ; பொங்கலை கொண்டாட விவசாயிகள் ஆர்வம்
தை பிறந்தால் வழி பிறக்கும்! தென்னை பிரச்னைகள் தீரும் என நம்பிக்கை ; பொங்கலை கொண்டாட விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜன 14, 2025 06:29 AM

பொள்ளாச்சி: பாரம்பரியம் மாறாமல் பொங்கல் பண்டிகையை கொண்டாட விவசாயிகள், பொதுமக்கள் தயாராகவுள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப, தென்னை விவசாயிகளின் கஷ்டங்கள் நீங்கி, விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில், தென்னை, நெல், கரும்பு, வாழை, பாக்கு, காய்கறி உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகள் செய்யப்படுகின்றன. மேலும், கால்நடை வளர்ப்பிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், பொள்ளாச்சியில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடந்த, 2023ம் ஆண்டு பருவமழை கை கொடுக்காதது; விளை பொருட்களுக்கு விலை கிடைக்காதது போன்ற பல்வேறு பிரச்னைகளால், பொங்கல் பண்டிகையை கொண்டாட விவசாயிகளிடையே ஆர்வம் குறைந்து காணப்பட்டது.
நடப்பாண்டு, விவசாயம் செழிப்படைந்துள்ளதால், பண்டிகையை கொண்டாட விவசாயிகள், பொதுமக்கள் தயாராகிவிட்டனர். வீடுகளை சுத்தம் செய்தல் மற்றும் வெள்ளையடிக்கும் பணியில், கடந்த சில வாரங்களாக ஈடுபட்டனர்.
வீடுகள் மட்டுமின்றி, தெருக்களிலும் சாணத்தை தெளித்து, வண்ணக் கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி, பொங்கல் விழாவை வரவேற்க தயராகி வருகின்றனர்.
பொங்கல் விழா மூன்று நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். முதல் நாள் போகி பண்டிகையும், இரண்டாம் நாள் தை பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.
நேற்று, போகி பண்டிகையோடு, கொண்டாட்டத்தை மக்கள் துவக்குகின்றனர். வீடுகளை சுத்தம் செய்து, பழைய பொருட்களை வெளியேற்றி, ஆவாரம்பூ, பூளைப்பூ, மாவிலை, வேப்பிலை, எருக்கந்தலை கொண்டு, 'காப்பு' கட்டி விழா கொண்டாட்டத்தை துவக்க ஆர்வம் காட்டினர்.
தொடர்ந்து, பொங்கல் விழா மற்றும் மாட்டுப்பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இதனால், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் கூட்டமாக வருவதை காண முடிகிறது.
உறவுகளை வளர்க்கும் விழா மட்டுமின்றி கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில், பொங்கல் விழாவை கொண்டாடுகின்றனர். நாகரிக மாற்றம் ஏற்பட்டாலும், இன்றும் மறையாமல் காணப்படும் கொண்டாட்டங்களே இதற்கு சான்றாக உள்ளன.
கிராமப்புறங்களில், மார்கழி மாதம் முழுவதும் ஆண்கள் சலகெருது ஆட்டம், தேவராட்டம் ஆடியும், பெண்கள், கும்மியாட்டம் ஆடியும் மகிழ்ந்து வருவதை காண முடிகிறது.
விவசாயிகள் கூறியதாவது: தேங்காய் விலை வீழ்ச்சி, தென்னையில் பூச்சி தாக்குதல் போன்ற பல்வேறு காரணங்களினால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பருவமழை கை கொடுத்தாலும், பல்வேறு பாதிப்புகளால் தென்னை விவசாயிகளுக்கு நஷ்டம் மட்டுமே மிஞ்சியது.
தற்போது மார்க்கெட்டில் தேங்காய், கொப்பரை விலை உயர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இன்று பிறக்கும் தை மாதம், விவசாயிகளின் கஷ்டம் நீங்கி விவசாயம் செழிக்க வேண்டும். விவசாயத்துக்கு உறுதுணையாக உள்ள கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
நோய் தாக்குதல் போன்ற பிரச்னைகளால் சோர்வடைந்திருந்த நிலையில், இன்று பிறக்கும் தை மாதம் எல்லா பிரச்னைகளும் நீங்கி, வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் பொங்கல் பண்டிகை கொண்டாட தயாராகி வருகிறோம்.
இவ்வாறு, கூறினர்.