/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலப் பட்டாக்களில் பெயர் மாற்ற லஞ்சம்; மறுத்தால் விளக்கம் கேட்டு இழுத்தடிப்பு
/
நிலப் பட்டாக்களில் பெயர் மாற்ற லஞ்சம்; மறுத்தால் விளக்கம் கேட்டு இழுத்தடிப்பு
நிலப் பட்டாக்களில் பெயர் மாற்ற லஞ்சம்; மறுத்தால் விளக்கம் கேட்டு இழுத்தடிப்பு
நிலப் பட்டாக்களில் பெயர் மாற்ற லஞ்சம்; மறுத்தால் விளக்கம் கேட்டு இழுத்தடிப்பு
ADDED : பிப் 17, 2025 10:36 PM

கோவை; கோவையில் பட்டா மாறுதல் பெற, மாத கணக்கில் மக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நீடிக்கிறது. வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவு, எந்த ஒரு வருவாய்த்துறை அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்பதால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
கோவையில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில், பட்டா மற்றும் சிட்டா ஆகியவை நில ஆவணங்களாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலங்களை விற்பனை செய்யும் போதும் இறப்பு, தானம் வழங்கும் போது, நில ஆவணங்களை பெயர் மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
அப்படி பெயர் மாற்றம் செய்வதற்கு, ஆன்லைன் முறையில் பட்டா சிட்டா அல்லது டி.எஸ்.எல்.ஆர்., ஆதார் உள்ளிட்டவற்றை ஸ்கேன் செய்தும், அதற்கான ஆவணங்களை இணைத்தும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் நிலம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியாக இருந்தால், அவை கிராம நிர்வாக அலுவலரால் 'அப்ரூவ்' செய்யப்படும்.
அதன் பின்பு வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார், தாசில்தார் ஆகியோரால் அப்ரூவ் செய்யப்பட்டு பட்டா, சிட்டா வழங்கப்படும்.
அப்படி பெற விண்ணப்பதாரர்கள், நிலத்தின் மதிப்பு எவ்வளவோ, அதற்கேற்ப சர்வேயர்களுக்கும், கிராமநிர்வாக அலுவலர்களுக்கும், வருவாய்த்துறை ஆய்வாளர்களுக்கும், துணைதாசில்தார்களுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும்.
லஞ்சம் கொடுக்காதவர்களின் விண்ணப்பம், நிலுவை வைக்கப்படுகிறது. சில விண்ணப்பங்களுக்கு விளக்கங்களை கேட்டும், ஆவணங்களை இணைக்கச்சொல்லியும் அறிவுறுத்துகின்றனர்,
கேட்கும் ஆவணங்களை இணைத்து, அனுப்ப மீண்டும் ஒருமுறை விண்ணப்பதாரர் இ-சேவை மையத்துக்கு சென்று, மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு கட்டணமும் செலுத்த வேண்டும்.
லஞ்சத்தொகையை கொடுக்காத விண்ணப்பதாரர்களை, ஒரு முறை இரண்டு முறை அல்ல பல முறை விண்ணப்பதாரர்களுக்கு விளக்கம் கேட்டு, விண்ணப்பத்தை திருப்பி அனுப்புகின்றனர்.
எதற்காக அனுப்புகின்றனர் என்ற விபரம் தெரியாமல், விண்ணப்பத்தை அனுப்பிய உடன் கிராமநிர்வாக அலுவலர் அல்லது லேண்ட் சர்வேயரை நேரில் சந்தித்து, விண்ணப்ப எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவித்து, அவருக்கு நிலமதிப்புக்கு ஏற்ற சதவீதத்தை கணக்கீடு செய்து பல ஆயிரங்களை லஞ்சமாக கொடுக்கும் பட்சத்தில், பட்டா மாறுதலாகி வழங்கப்படுகிறது.
இந்த லஞ்ச வசூலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லஞ்சம் கேட்கும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை: டி.ஆர்.ஓ.,
மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கூறியதாவது:
வருவாய்த்துறை சார்ந்த 26 சான்றிதழ்கள், ஆன்லைனில் 'அப்லோடு' செய்த நாளிலிருந்து, 15 நாட்களுக்குள் விசாரணை செய்து, சான்றிதழ் வழங்க வேண்டும். தற்போது வரை, 60 நாட்களுக்கு உட்பட்டு, எந்த மனுக்களும் நிலுவையில் இல்லை.
ஆன்லைனில் சான்றிதழ் வழங்கப்பட்டாலும், விசாரணை மேற்கொள்ள மொபைல் போனில் பேசி வரவழைத்து, லஞ்சம் கேட்கும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆதாரப்பூர்வமாக புகார் அளித்தால், நிர்வாக ரீதியான விசாரணை மேற்கொண்டு, துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போலி புகார் கொடுப்போர் மீதும், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

