/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நாடு முழுதும் வந்தால் தமிழகத்திலும் மதுவிலக்கு'
/
'நாடு முழுதும் வந்தால் தமிழகத்திலும் மதுவிலக்கு'
ADDED : ஏப் 23, 2025 12:58 AM
சென்னை:“இந்தியா முழுதும் மதுவிலக்கு என்ற நிலை வரும்போது, தமிழகத்திலும் முதல்வர் நடைமுறைப்படுத்துவார்,” என, அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
சட்டசபையில் நேற்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு, அந்த துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பதிலுரை:
கடந்த 2025ல், 952 கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,042 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 'டாஸ்மாக்கின்' அனைத்து செயல்பாடுகளும் முழுதுமாக கணினிமயமாக்கும் திட்டம், 28 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லுாரிகள், கோவில் உட்பட பல்வேறு இடங்களில் இருக்கக்கூடிய, 103 மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
கடந்த 2016 - 21 அ.தி.மு.க., ஆட்சியில், 10 ரூபாய் கூடுதலாக வைத்து விற்கப்பட்ட வகையில், 15,405 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14.83 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில், 6.79 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. டாஸ்மாக்கை பொறுத்தவரை பார், போக்குவரத்து என, எந்த டெண்டராக இருந்தாலும், வெளிப்படை தன்மையோடு, 'ஆன்லைன்' முறை வந்துவிட்டது.
இந்தியா முழுதும் மதுவிலக்கு என்ற நிலை வரும்போது, தமிழகத்திலும் அதை முதல்வர் நடைமுறைப்படுத்துவார். அதில், அரசு உறுதியாக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

