ADDED : மார் 21, 2026 06:47 AM
அன்னுார்: அவிநாசி தொகுதியில் போட்டியிட பா.ஜ.,வில் பலரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
அவிநாசி தொகுதியை உள்ளடக்கிய நீலகிரி எம்.பி., தொகுதியில், பா.ஜ., 1998 மற்றும் 1999 என இரு தேர்தல்களில் வெற்றி பெற்றது. அப்போது, அவிநாசி தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் மாஸ்டர் மாதன் கணிசமான ஓட்டுக்கள் பெற்றார்.
அவிநாசி தனி தொகுதியில் பா.ஜ., ஐந்து முறை போட்டியிட்டுள்ளது. தற்போது அவிநாசி தொகுதியில் மத்திய அரசு சார்பில் பல ஆயிரம் பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்தில் பல ஆயிரம் பேர் பயன் பெற்று வருகின்றனர். எனவே, இத்தொகுதியை பா.ஜ.,வுக்கு தர வேண்டுமென, அ.தி.மு.க., தலைமையிடம், தமிழக பா.ஜ., வலியுறுத்தியுள்ளது. இத்தொகுதியில் போட்டியிட வேண்டுமென, மத்திய இணையமைச்சர் முருகன் ஆதரவாளர்கள், அவரை வலியுறுத்தி வருகின்றனர்.
இத்தொகுதியை பா.ஜ.,வுக்கு ஒதுக்கும் பட்சத்தில், மத்திய இணையமைச்சர் முருகன் போட்டியிடுவார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, பட்டியல் அணியின் கோவை வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் கவுதமன் போட்டியிட முயற்சிக்கின்றனர்.
தொகுதியில், அன்னுார், அவிநாசி, கோவை மற்றும் திருப்பூரை சேர்ந்த 10 பேர் போட்டியிட முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
