/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இப்போதே இப்படி என்றால்...?தாகத்தை தீர்க்க, என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள்?
/
இப்போதே இப்படி என்றால்...?தாகத்தை தீர்க்க, என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள்?
இப்போதே இப்படி என்றால்...?தாகத்தை தீர்க்க, என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள்?
இப்போதே இப்படி என்றால்...?தாகத்தை தீர்க்க, என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள்?
UPDATED : மார் 19, 2024 02:23 AM
ADDED : மார் 19, 2024 12:19 AM

கோடை வெயில் துவங்கினால் ஏற்படும் வெப்பத்தை சமாளித்து விடலாம். குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதுதான் பெரும் சவால். கோவையின் தாகத்தை தணித்து வரும் சிறுவாணியும், பில்லுாரும் மெல்ல வற்றி வர, குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடத் துவங்கி விட்டனர். தங்கள் 'ஓட்டு தாகத்தை' தீர்க்க மக்களை தேடி வரும் கட்சியினர், அவர்களின் குடிநீர் தாகத்தை தீர்க்க, என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள்?
ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமான வரியினங்கள் உள்ள கோவை மாநகராட்சியில், 3 லட்சத்து 10 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. இவற்றின் மூலமாக, ஆண்டுக்கு ரூ.563 கோடி, குடிநீர் வரியாக வசூலாகிறது. அதன் அடிப்படையில்தான், ஒன்றரை லட்சம் இணைப்புகளுக்கு, 24 x 7 குடிநீர் விநியோகம் செய்வதற்கு, ரூ.2961 கோடிக்கு சூயஸ் நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஐந்தாண்டுகளில் பணி முடித்து, அதன்பின் 21 ஆண்டுகளுக்கு, இயக்கிப் பராமரிக்க மட்டும், ரூ.2325 கோடி வழங்க, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
வாய் திறக்காத கட்சிகள்!
திட்டமிட்டபடி, கட்டமைப்புப் பணிகள் இரு ஆண்டுகளில் முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால், அணையிலேயே தண்ணீரில்லாதபோது, எப்படி 24 x 7 குடிநீர் விநியோகம் தர முடியுமென்பது, பெரும் கேள்விக்குறியாகவுள்ளது.
அன்றாடம் விநியோகிக்கப்படும் 25.7 கோடி லிட்டர் குடிநீரில், 60 வார்டுகளுக்கு 19.5 கோடி லிட்டர், இணைப்புப் பகுதிகளில் உள்ள 40 வார்டுகளுக்கு 6.2 கோடி லிட்டர் என்று ஒப்பந்தமே ஆகிவிட்டது.
பாரபட்சமான இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தே, அ.தி.மு.க., ஆட்சியில் தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராடின. ஆட்சி மாறியும் எதுவுமே மாறவில்லை; இன்று தட்டுப்பாடு வந்து விட்ட நிலையில், எந்தக் கட்சியினரும் வாய் திறப்பதேயில்லை.
தடையின்றி கிடைக்கிறது மது!
இப்போது கோவையில் 24 x 7 தடையின்றிக் கிடப்பது டாஸ்மாக் தண்ணீர் தான்...குடிநீரில்லை. கோடை துவங்கும் முன்பே, குடங்களைத் துாக்கிக் கொண்டு வீதி வீதியாக மக்கள் அலைய ஆரம்பித்து விட்டனர்.
பருவமழை துவங்குவதற்குள், நிலைமை என்னவாகுமென்றே கற்பனை செய்யமுடியவில்லை.
மாதமிருமுறை மட்டுமே
சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் அதிகம்; திருட்டுத்தனமான குடிநீர் விற்பனை அமோகம்; பல்வேறு வணிக நிறுவனங்களிலும், ஓட்டல்களிலும் கழிப்பறையிலேயே குடிநீர் கொட்டும் நிலையில், நகரின் பல பகுதிகளில் மாதமிரு முறை, அதுவும் சிறிது நேரம் தான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
அணைகளின் நீர் இருப்பு குறைவு என்பதை விட, விநியோகத்திலுள்ள குறைபாடுகளே இதற்குக் காரணம். சட்டவிரோத இணைப்புகளை கண்டறிந்து துண்டிப்பது, வினியோகத்தில் உள்ள குளறுபடிகளை களைவது, முறையாக திட்டமிடுவது ஆகியவற்றால், இருக்கும் குடிநீரை வைத்து கோடையை கடந்து விடலாம். தாகத்துக்குத் தண்ணீர் கொடுக்க முடியாத மாநகராட்சி நிர்வாகம், 'ஸ்மார்ட் சிட்டி', என்று சொல்லிக் கொண்டு, எத்தனை ஆயிரம் கோடிகளில் எவ்வளவு திட்டம் போட்டு என்ன பயன் என்று கேள்வி கேட்கிறார்கள் மக்கள்.
ஓட்டு கேட்டு செல்பவர்கள், இதற்கான பதிலை தயாராக வைத்துக்கொள்வது நல்லது!

