/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொறுப்போடு இருந்தால் நகரம் 'சுத்தம்'; கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க நித்தம்
/
பொறுப்போடு இருந்தால் நகரம் 'சுத்தம்'; கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க நித்தம்
பொறுப்போடு இருந்தால் நகரம் 'சுத்தம்'; கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க நித்தம்
பொறுப்போடு இருந்தால் நகரம் 'சுத்தம்'; கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க நித்தம்
ADDED : ஜூன் 01, 2025 11:26 PM

கோவை மாநகராட்சி பகுதிகளில், குப்பை சேகரிக்கும் பணி இரு ஆண்டுகளுக்கு முன் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாநகராட்சியில் தற்போது, 2,000க்கும் மேற்பட்ட நிரந்தர துாய்மை பணியாளர்கள், 4,650 தற்காலிக பணியாளர்கள் உள்ளனர். தவிர, 910 கொசு ஒழிப்பு பணியாளர்கள், டிரைவர், கிளீனர் என, 500க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
வீடுகள் தோறும் சென்று குப்பை சேகரிப்பது, தரம் பிரித்தல் உள்ளிட்ட மேலாண்மை பணிகளை பெரும்பாலும் தற்காலிக பணியாளர்களை கொண்டு, தனியார் நிறுவனம் பணி செய்து வருகிறது.
குப்பைத்தொட்டி இல்லா மாநகராட்சியை உருவாக்கும் நோக்கில் குப்பையை வீடு தோறும் சென்று தரம் பிரித்து, தவறாது வாங்குமாறு துாய்மை பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஆங்காங்கே வைக்கப்பட்ட குப்பை தொட்டிகளும் அகற்றப்பட்டு விட்டன.
இந்நிலையில், காலை நேரத்தில் முறையாக குப்பையை ஒப்படைக்காதது, துாய்மை பணியாளர்களை அவமதிப்பது போன்ற காரணங்களால், குப்பை தேக்கம் தொடர்கதையாக உள்ளது. குறிப்பிட்ட நேரம் மட்டுமே வீடு தோறும் சேகரிக்க செல்ல முடியும் என்ற நிலை, துாய்மை பணியாளர்களுக்கு உள்ளது.
இதனால் பிளாஸ்டிக் கவர்களில் குப்பையை அடக்கி குளக்கரையை ஒட்டிய இடங்கள், நீர் நிலைகளுக்குள் பொறுப்பற்றவர்கள் துாக்கி வீசி செல்கின்றனர்.
கவுண்டம்பாளையம், வடவள்ளி, இடையர்பாளையம், போத்தனுார், செட்டிபாளையம், வெள்ளலுார் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு, புலியகுளம், பங்கஜாமில் ரோடு, ஜி.என்., மில்ஸ் உட்பட மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் குப்பை தேக்கம் தொடர்கதையாக இருக்கிறது.
இது போன்ற இடங்களில் மாநகராட்சி நிர்வாகம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், துாய்மை பணியாளர்கள் எண்ணிக்கையையும் அதிகரித்து குப்பைத் தேக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு.