/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் பறிமுதல் செய்தால்... இனி 'சீல்' தான்! கட்டுப்படுத்த மாநகராட்சி முடிவு
/
பிளாஸ்டிக் பறிமுதல் செய்தால்... இனி 'சீல்' தான்! கட்டுப்படுத்த மாநகராட்சி முடிவு
பிளாஸ்டிக் பறிமுதல் செய்தால்... இனி 'சீல்' தான்! கட்டுப்படுத்த மாநகராட்சி முடிவு
பிளாஸ்டிக் பறிமுதல் செய்தால்... இனி 'சீல்' தான்! கட்டுப்படுத்த மாநகராட்சி முடிவு
UPDATED : ஜன 16, 2024 02:12 AM
ADDED : ஜன 15, 2024 10:58 PM

கோவை:தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' விஷயத்தில் இதுவரை அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுவந்த நிலையில், 'சீல்' வைப்பு நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த, 2022 ஜூலை 1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வெளிமாநிலங்களில் இருந்து கோவைக்குள் நுழையும் இந்த வகை பிளாஸ்டிக் பொருட்களை கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு வியாபாரிகள் 'டோர் டெலிவரி' செய்கின்றனர்.
மாநகராட்சி பகுதிகளில் தினமும் சேகரமாகும், 1,250 டன் வரையிலான குப்பையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் தென்படுவதே இதற்கு சாட்சி. குறிப்பாக, குளக்கரைகள், நீர் வழித்தடங்களில் இது குவிந்து காணப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் இப்பொருட்களை தடுக்க, மாநகராட்சி சுகாதார பிரிவினர் சோதனைகள் நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர். சிறிய வணிக விற்பனையாளர்களுக்கு ரூ.100 முதல் பெரிய வணிக நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் வரை அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பிளாஸ்டிக் புழக்கத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. கடந்தாண்டு மட்டும், 10 ஆயிரத்து, 957 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.24 லட்சத்து, 57 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கடந்த, 2ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில், 188 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.12 லட்சத்து, 81 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட டவுன்ஹால், பெரியகடை வீதி, காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் துணிக்கடை, மொபைல் போன் கடை, ஓட்டல்கள் அதிகம் உள்ளதால் அதிகபட்ச பறிமுதல் இங்குதான் நடக்கிறது.
இதன் புழக்கத்தை கட்டுப்படுத்த லட்சங்களில் அபராதம், 'சீல்' வைப்பு போன்ற கடும் நடவடிக்கைகளை எடுக்க, சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
'சீல்' வைக்கப்படும்!
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, ''தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் புழக்கத்தை கட்டுப்படுத்த, அதிக அபராதம் வசூலிப்பதுடன், வரும் காலங்களில் கடைகள், ஓட்டல்கள், பெட்டி கடைகள் உள்ளிட்டவற்றை 'சீல்' வைக்கவும் முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.