/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதுகெலும்பு நன்றாக இருந்தால் நீங்கள் பாக்கியசாலி! கணபதி மாநகர் ரோட்டில் சென்றால் அவ்ளோதான்
/
முதுகெலும்பு நன்றாக இருந்தால் நீங்கள் பாக்கியசாலி! கணபதி மாநகர் ரோட்டில் சென்றால் அவ்ளோதான்
முதுகெலும்பு நன்றாக இருந்தால் நீங்கள் பாக்கியசாலி! கணபதி மாநகர் ரோட்டில் சென்றால் அவ்ளோதான்
முதுகெலும்பு நன்றாக இருந்தால் நீங்கள் பாக்கியசாலி! கணபதி மாநகர் ரோட்டில் சென்றால் அவ்ளோதான்
ADDED : டிச 28, 2025 05:09 AM

கோவை: கோவை மாநகராட்சியோடு 2011ல் இணைக்கப்பட்ட சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அம்ரூத் 2.0 திட்டத்தில் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக அடிக்கடி தோண்டியதால் ரோடு குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருக்கிறது.
கணபதி மாநகர் பகுதியில் உள்ள ரோட்டின் தற்போதைய நிலையை வார்த்தைகளால் சொல்ல முடியாது; அந்தளவுக்கு மேடு பள்ளமாக காணப்படுகிறது. குழிகள் இருக்கின்றன. ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பரவிக் கிடக்கின்றன. பாதாள சாக்கடை குழாய் பதித்த இடத்தில் மட்டும் குடிநீர் வடிகால் வாரியத்தின் ஒப்பந்த நிறுவனம் மூலம் கான்கிரீட் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டிருக்கிறது.
அவை தரமின்றி செய்திருப்பதால் சிமென்ட் கலவை கரைந்து, ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, வழிநெடுக குழிகளாக காணப்படுகின்றன. பேட்ச் ஒர்க் செய்தது போலவே இருக்காது; அந்தளவுக்கு ரோடு படுமோசமாக இருக்கிறது.
கணபதி போலீஸ் குவார்ட்டர்ஸ் மெயின் ரோடு, கே.கே. நகர், பண்ணாரியம்மன் கோயில் அருகே கிறிஸ்து நகர் பகுதியில் பயணிக்கவே முடியாத அளவுக்கு பள்ளம் உருவாகியிருக்கிறது.
சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து ரோடுகளும் இதே நிலைமையில் இருப்பதால், இவ்வழித்தடங்களில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கீடு செய்து, என்னென்ன வகையான வாகனங்கள் பயணிக்கின்றன என்பதற்கேற்ப தரமான சாலையை மாநகராட்சி போட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
ஏனெனில், இவ்வழித்தடத்தில் வாகனங்களில் செல்வோருக்கு குழிகளில் ஏறி இறங்கிச் செல்வதால் முதுகெலும்பு பாதிக்கிறது. அவ்வழியாகச் சென்று வந்தவர்களுக்கு இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனில், பாக்கியசாலி எனலாம்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''ரோடு போடுவதற்கு மேலும் 220 கோடி ரூபாய் கேட்டு கருத்துரு அனுப்பியுள்ளோம். அடுத்த வாரம் சென்னையில் ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. தேவையை சுட்டிக் காட்டி, முதல்கட்டமாக, 150 கோடி பெறப்படும்.
''குழாய் பதித்த இடங்களில் 'பேட்ச் ஒர்க்' மட்டும் செய்திருந்தால், ரோடு சரிசமமாக இருக்க வாய்ப்பிருக்காது.
''அதன் மீது மறு தார் தளம் அமைத்தால் மட்டுமே போக்குவரத்துக்கு உகந்ததாக இருக்கும். கணபதி மாநகர் பகுதிக்கு முன்னுரிமை கொடுத்து ரோடு போடப்படும்,'' என்றார்.

