/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயங்கிக் கொண்டே இருந்தால் வராது முதுமை
/
இயங்கிக் கொண்டே இருந்தால் வராது முதுமை
ADDED : நவ 09, 2025 12:52 AM

நாட்கள் கடத்தி கொண்டு போவது தான் வயது. அதை பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. நம்மை எப்போதும் பிசியாக வைத்துக் கொண்டாலே, முதுமை நமக்கு வந்து விட்டதோ என்று எண்ண தேவையில்லை,'' என்கிறார், 70 வயதான கனக சுப்ரமணியம்.
நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே கொலக்கம்பையை சேர்ந்த இவர், 1981 முதல் 2010 வரை, ஊட்டி டூ மேட்டுப்பாளையம் அரசு பஸ்சில் நடத்துனராக பணிபுரிந்தார். பணியின் போது, பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்வது, அவர்களுக்கு இயற்கை சார்ந்த, பஸ்சில் நடந்து கொள்ளக் கூடிய விஷயங்களை அழகாக விவரித்த பின்பே, ஓட்டுநர், பேருந்து இயக்குவது வழக்கம். 2010ல் இருந்து 2014 வரை, பொள்ளாச்சியில் உள்ள தமிழக அரசின் போக்குவரத்து கழக பயிற்சி நிலையத்தில், பயிற்றுநராக இருந்தார். தற்போது பிரஸ்காலனியில் வசித்து வரும் இவர், வாழ்க்கை அழகானது என்கிறார்.
''பணியில் இருந்த போதே, போக்குவரத்து கழகத்தின் நான்கு முக்கிய இலக்குகளான கனிவான சேவை, வருவாய் ஈட்டுதல், எரிபொருள் சேமிப்பு, விபத்தில்லா இயக்கம் குறித்து, பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து வந்தேன். ஓய்வுக்கு பிறகும், அழைக்கும் இடங்களில், இன்று வரை சென்று பயிற்சி அளித்து வருகிறேன்,''
ஓய்வுக்கு பிறகு, கைதிகளுக்கு கவுன்சிலிங், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி என, பணியை தொடர்கிறார். கோவை மத்திய சிறையில் அலுவல் சாரா பார்வையாளராக இருக்கிறார். உயிர் அமைப்புடன் இணைந்து தனித்துவ சாலை பாதுகாப்பு சேவையாளராகவும், சற்குரு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.
''ஒவ்வொரு வியாழனும், போலீசார் உதவியோடு, பள்ளி, மாணவ, மாணவியருக்கு ஒரு நாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பர். இவர்களை டிராபிக் பார்க், ஏதாவது ஒரு காவல் நிலையம், மியூசியம், காவல் கட்டுப்பாட்டு அறை ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று, வழிகாட்டியாக செயல்படுகிறேன்,''
''எப்படி...இப்படி,'' என்ற நம் கேள்விக்கு, '' நாம் இயங்கிக் கொண்டே இருந்தால், நேரம் போதாது. சேவை செய்ய வயது தடையில்லை. நோய் வராது; இளமையோடு இருக்கலாம். மனசு உற்சாகத்துடன் இருக்கும்,'' என்று கூறி விடைபெற்றார் கனக சுப்ரமணியம்.

