/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போகிற போக்கில் குப்பை வீசினால் சிக்கிக்கொள்வீர்கள்! கேமரா உதவியால் அபராதம் நிச்சயம்
/
போகிற போக்கில் குப்பை வீசினால் சிக்கிக்கொள்வீர்கள்! கேமரா உதவியால் அபராதம் நிச்சயம்
போகிற போக்கில் குப்பை வீசினால் சிக்கிக்கொள்வீர்கள்! கேமரா உதவியால் அபராதம் நிச்சயம்
போகிற போக்கில் குப்பை வீசினால் சிக்கிக்கொள்வீர்கள்! கேமரா உதவியால் அபராதம் நிச்சயம்
ADDED : ஜூலை 08, 2025 11:46 PM

கோவை; மாநகராட்சி பகுதிகளில் விதிமீறி குப்பை கொட்டும் இடங்களில், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி அபராத நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இனி, போகிற போக்கில், குப்பையை மூட்டையாக கட்டி, கண்ட இடங்களில் வீசிச் செல்லும் அலட்சியம் முடிவுக்கு வரும் என நம்பலாம்.
மாநகராட்சி பகுதிகளில் மக்கும், மக்காதது, 'இ-வேஸ்ட்' என தினமும், 1,250 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. இரு ஆண்டுகளுக்கு முன்பு, குப்பை மேலாண்மை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. குப்பை மேலாண்மை சரிவர மேற்கொள்வதில்லை என கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மாநகராட்சி நிர்வாகமே மீண்டும் மேற்கொள்ள வலியுறுத்தினர்.
இது ஒருபுறம் இருக்க, குப்பை தொட்டி இல்லாத நகரை உருவாக்கும் நோக்கில் பெரும்பாலான இடங்களில் குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு விட்டன. துாய்மை பணியாளர்கள் வீடு தோறும் சென்று தரம் பிரித்து, குப்பை சேகரித்து வருகின்றனர்.
அதே சமயம், ஆட்கள் பற்றாக்குறையால் துாய்மை பணியாளர்களுக்கு, பணிச்சுமை அதிகரித்துள்ளதாக புலம்பல்கள் எழுகின்றன. குப்பை தொட்டி அகற்றப்பட்ட இடங்களில், வழக்கம்போல் குப்பை கொட்டுவது, தொடர்கதையாக உள்ளது.
இதை தவிர்க்குமாறு பிளக்ஸ் பேனர், போர்டுகள் வைத்தாலும், சுற்றிலும் 'கிரீன் நெட்' கட்டி மறைத்தாலும், மீண்டும் அதே இடத்தில் குப்பை கொட்டப்படு கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், குப்பை மேலாண்மை குறித்த ஆய்வின்போது, சரவணம்பட்டி உள்ளிட்ட இடங்களில் சாலையோரம், பொது இடங்களில் குப்பை குவிப்பது தெரியவந்தது. இதையடுத்து, விதிமீறல் இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.
ஒத்துழைப்பு தேவை
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சரவணம்பட்டி, காட்டூர், ராம் நகர், சோமசுந்தரா மில் ரோடு, சிங்காநல்லுார்-வெள்ளலுார் செல்லும் ரோடு, கள்ளிமடை காமாட்சியம்மன் கோவில் பின்புறம், நஞ்சப்பா நகர், நஞ்சுண்டாபுரம் ரயில்வே பாலம் கீழ் பகுதி என பல்வேறு இடங்களில், இன்றும் குப்பை குவிப்பது தொடர்கிறது.
'இதுபோன்ற இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி, விதிமீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும். நகரை துாய்மையாக வைத்திருக்க, பொது மக்கள் ஒத்துழைப்பும் மிக அவசியம்' என்றனர்.