/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
சிரமம் பார்க்காமல் உழைத்தால் புதினா போல் மணக்கும் வாழ்க்கை!
/
சிரமம் பார்க்காமல் உழைத்தால் புதினா போல் மணக்கும் வாழ்க்கை!
சிரமம் பார்க்காமல் உழைத்தால் புதினா போல் மணக்கும் வாழ்க்கை!
சிரமம் பார்க்காமல் உழைத்தால் புதினா போல் மணக்கும் வாழ்க்கை!
PUBLISHED ON : ஜூலை 20, 2025 12:00 AM

மழை, வெயில், பனி என எதுவாக இருந்தாலும், காலை 6:30 மணிக்கு, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை நிரப்பிய பேக்குகளை, இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு கிளம்பி விடுகிறார் மாராத்தா. வயது 70; ஆனால், நம்ப முடியவில்லை. காரணம் அவர் காட்டும் உழைப்பு.
சுந்தராபுரம் பழனியப்பா லே-அவுட் பகுதியை சேர்ந்த இவரின், 20 வருட பயணம் தான் இது. கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை வாங்கி, தரம் பிரித்து, பொதுமக்களின் வீட்டுக்கே சென்று கொடுத்து வருகிறார்.
சுற்றுவட்டாரத்தில் உள்ள வீதிகள் வழியாக சென்று, பேஸ் 2 வரை, தினமும் 2 கி.மீ., நடப்பது இவருக்கு பழகிப் போன ஒன்று. 'கொத்தமல்லி, புதினா, கறிவேப்பில...' என்று இவர் கூவும் அழகே தனிதான்.
நேத்து ஏ பாட்டிமா வரல... உங்கள ரொம்ப எதிர்பார்த்துட்டே இருந்தோம்' என்று, பொதுமக்கள் கேட்கும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார்.
இந்த வயசுலேயும் எப்படி உழைச்சுகிட்டே இருக்கீங்க?
நா உழைச்சா தான், அன்னிக்கு சாப்பாடு. காலையில சந்தைக்கு போயி, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பில வாங்கிட்டு, வீதி, வீதியா போய், வித்துட்டு வருவேன். ஒரு நாளைக்கு எப்படியும், 100 ரூவாயில இருந்து 200 ரூவா வரைக்கும் லாபம் கெடைக்கும்.
ரேஷன் கடையில 5 கிலோ அரிசி குடுக்குறாங்க. அதுல தான் சாப்பிட்டுகிட்டு இருக்கேன். வாழ்க்கை இப்படியே பழகிச் போச்சு கண்ணு. பொண்ணு இருக்கா. பேரன், பேத்திய பாத்தாச்சு. அப்பப்போ பொண்ணு வந்து பாத்துட்டு போகும்.
இந்த வருமானம் உங்களுக்கு சரியாக இருக்குமா பாட்டிமா?
யாருக்கும் பாரமா இருக்கக் கூடாதுன்னு, தினமும் உழைச்சுகிட்டே இருக்கேன். யாரையும் குறை சொல்ல மாட்டேன். என் உடம்புல தெம்பு இருக்கற வரைக்கும் தினமும் இப்படி போய்ட்டே இருப்பேன்.
500 ரூவா வாடக வீட்ல இருக்கேன். கணக்கு பண்ணித்தான் வாழணும். கொஞ்ச நாள் முன்னால, உடம்பு தொந்தரவு பண்ணுச்சு. அப்போ சேத்து வெச்ச காசு உதவுச்சு. ஜனங்க எங்கிட்ட கொத்தமல்லி, புதினா, கறிவேப்பில வாங்குற வரைக்கும், வண்டி ஓடிட்டே இருக்கும்.