PUBLISHED ON : ஜூலை 20, 2025 12:00 AM

டி.ஈஸ்வரன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடந்த 2006ல்
சட்டசபை தேர்தலின் போது, திருச்சியில் நடந்த தி.மு.க., மாநாட்டிற்கு
செல்லாமல், போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தது தான், அரசியல்
வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு' என பேசியுள்ளார், ம.தி.மு.க.,
பொதுச்செயலர், வைகோ.
ஒரு கட்சியோடு கூட்டணி வைப்பதும், விலகுவதும் சகஜம்தான்.
மு-ன்பு
ஒருமுறை அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த வி.சி., தலைவர் திருமாவளவன்,
கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது, 'என் தம்பி திருமாவளவன்; அவர்
எங்கிருந்தாலும் வாழ்க' என்று கூறினார், ஜெயலலிதா. இந்த அரசியல் நாகரிகம்
வைகோவிடம் இல்லை.
இன்று ஜெயலலிதாவை சந்தித்ததை தவறு என்று கூறும்
வைகோ, கருணாநிதியின் வாரிசு அரசியலை எதிர்த்த காரணத்தினால்தான்,
தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு ஆதரவாக,
மதுராந்தகம் ஆறுமுகம், கணேசன், பொன்முத்து ராமலிங்கம், கண்ணப்பன், செஞ்சி
ராமச்சந்திரன் போன்ற முன்னணி தலைவர்கள் தி.மு.க.,வில் இருந்து விலகினர்.
தமிழகம் முழுதும் ஏராளமான தி.மு.க., தொண்டர்கள் வைகோவை ஆதரித்தனர்.
ஒருமுறை
திண்டுக்கல்லில் நடந்த ம.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் கொள்கை
பரப்பு செயலராக இருந்த நாஞ்சில் சம்பத், அன்றைய முதல்வர் கருணாநிதியை
கடுமையாக விமர்சிக்கவே, கூட்டத்தில் இருந்த தி.மு.க.,வினர் சேர்களை
துாக்கி, சம்பத்தை சரமாரியாக தாக்கினர்.
அங்கிருந்த அ.தி.மு.க.,வினர் தான் அவரை சுற்றி வளைத்து காப்பாற்றினர்.
சம்பத்தை போல் எத்தனையோ தொண்டர்கள் அன்று தாக்கப்பட்டனர். ஏழுமலை போன்ற ம.தி.மு.க., நிர்வாகிகள் படுகொலை ஆயினர்.
வைகோவிற்காக பலர் தீக்குளித்து தங்கள் உயிரை மாய்த்தனர்.
ஆனால்,
அனைத்தையும் மறந்து, கூட்டணி என்ற பெயரில் மீண்டும்தி.மு.க.,வோடு வைகோ
கைகோர்த்த போது, 'வைகோவிடம் மறுமலர்ச்சி போய் விட்டது' எனச் சொல்லி,
ம.தி.மு.க.,வில் இருந்து பலர் விலகினர்.
தி.மு.க.,வை போலவே,
தற்போது ம.தி.மு.க.,வில் வைகோவின் அரசியல் வாரிசை எதிர்த்து, திருப்பூர்
துரைசாமி, மல்லை சத்யா போன்றோர் விலகி செல்கின்றனர்.
பெருங்காயம் போல் சிறிது சிறிதாக ம.தி.மு.க., கரைந்து வருகிறது.
அன்றே
வாரிசு அரசியலை ஏற்று, தி.மு.க., வில் வைகோ இருந்திருந்தால், இன்று
டி.ஆர்.பாலு, துரைமுருகன் போன்றோரின் வாரிசுகள் எம்.பி., - அமைச்சர்
ஆகியிருப்பதை போல், வைகோவின் மகன் துரை வைகோவும் முக்கிய பதவியில்
அமர்ந்திருப்பார்.
அப்பாவிகள் பலர் இறந்திருக்க மாட்டனர்; அவர்களது குடும்பம் காப்பாற்றப்பட்டிருக்கும்.
எந்த வாரிசை எதிர்த்து கட்சி துவங்கினாரோ, அந்த வாரிசான ஸ்டாலினை மீண்டும் முதல்வர் ஆக்குவேன் என, இப்போது சூளுரைக்கிறார் வைகோ.
இதனால் என்ன பயன்?
அன்று வைகோவிற்காக போன உயிர்கள் திரும்பி வந்து விடுமா?
எனவே,
'ஜெயலலிதாவை சந்தித்தது தான் மிகப்பெரிய தவறு' என்று கூறுவதை விட,
கருணாநிதியை விட்டு பிரிந்து, ம.தி.மு.க.,வை துவக்கியது தான் வாழ்நாளில்
அவர் செய்த மிகப்பெரிய தவறு என்பதை இப்போதாவது வைகோ உணர்வாரா?
பிரிவினைவாதிகளை கண்டுகொள்ளுங்கள்!
ஏ.வி.ராமநாதன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'முருகன் தமிழ்க்கடவுள் என்றால், சிவன், பார்வதி தமிழர் தானே... விநாயகரை மட்டும் ஏன் தமிழ் கடவுள் என்று எவரும் சொல்வதில்லை?' என, அபத்தமாக கேட்டுள்ளார், வி.சி., தலைவர் திருமாவளவன்.
சிவ வழிபாடு சைவம் என்றும், சக்தி வழிபாடு - சாக்தம், விநாயகரை வழிபடுவது - காணபத்யம், முருகனை வழிபடும் கவுமாரம், விஷ்ணு வழிபாடு வைணவம் மற்றும் சூரிய வழிபாட்டை சவுரம் என்றும் அழைப்பர்.
இந்த ஆறு வழிபாட்டு முறைகளையும் இணைத் து,ஹிந்துக்கள் வழிபடும் சண்மதத்தை உருவாக்கினார், ஆதிசங்கரர்.
தமிழகத்தில் மட்டுமல்ல... இந்தியா முழுதும் இந்த ஆறு வழிபாடுகளும் ஹிந்துக்களிடையே உள்ளன.
இங்கு, எண்ணிலடங்கா சிவாலயங்கள் உள்ளது போல், வடக்கே - கேதார்நாத், மேற்கில் - சோமநாத், கிழக்கில் - புவனேஸ்வர் லிங்கராஜ், மத்தியில் - உஜ்ஜயினி மஹாகாளேஸ்வரர் என ஏராளமான சிவாலயங்கள் உள்ளன.
அதேபோன்று, இந்தியாவின் தென்முனையான குமரியில் வீற்றிருக்கும் கன்னியாகுமரி அம்மன் துவங்கி, வடக்கே வைஷ்ணவி தேவி, கிழக்கே காமாக்யா தேவி, மேற்கே அம்பாஜி என, நாட்டில் அம்பாள் கோவில்களுக்கும் பஞ்சமில்லை.
'விநாயகர் அகவல்' பாடிய அவ்வையார் பிறந்த தமிழகத்தில் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகரிலிருந்து, மும்பை சித்தி விநாயகர், மஹாராஷ்டிரா அஷ்ட கணபதி, ஆந்திரா காணிப்பாக்கம் விநாயகர், ராஜஸ்தான் ரந்தாம்போர் கணேஷ், கேரளா மதுார் கணபதி என்று நாடு முழுதும் விநாயகர் கோவில்கள் நிறைந்து உள்ளன.
இதேபோன்று தான், குன்று இருக்கும் இடமெல்லாம் தமிழகத்தில் குமரன் கோவில் கொண்டிருந்தாலும், கர்நாடகாவில் - குக்கே சுப்பிரமணியா, கேரளா - ஹரிபாடு சுப்பிரமணியசுவாமி, ஹரியானா - பெஹோவா கார்த்திகேயா, ஹிமாச்சல பிரதேசம் - கேலோங் கார்த்திகேயா, மும்பை - செம்பூர் முருகன், டில்லி - மலைமந்திர் முருகன் என்று நாடு முழுதும் முருகன் ஆலயங்கள் உள்ளன.
ஆனால், இங்குள்ள அரசியல்வாதிகள், முருகன் தமிழக்கடவுள்; தமிழகத்தை தவிர, அவருக்கு வேறு எங்கும் ஆலயங்கள் இல்லை என்பது போல் கதை விடுகின்றனர்.
முருகன் தமிழ்க்கடவுள் என்று கூறுவதற்கு காரணம், தமிழர் பெரிதும் போற்றி வழிபடும் கடவுள் என்பதால் தானே தவிர, மற்ற மாநிலங்களுக்கு சம்பந்தம் இல்லாத கடவுள் என்று பொருளல்ல.
சமஸ்கிருதத்தில் வியாசர் எழுதிய ஸ்கந்த புராணம், காளிதாசர் இயற்றிய குமார சம்பவம், ஆதிசங்கரர் எழுதிய சுப்ரமணிய புஜங்கம் போன்ற நுால்களே இதற்கு சான்று!
அதேபோன்று, தமிழகத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் முதல், எண்ணற்ற பெருமாள் கோவில்கள் இருப்பது போல், திருப்பதி - வெங்கடேசப் பெருமாள், திருவனந்தபுரம் - பத்மநாபசுவாமி, உத்தரகாண்ட் - பத்ரிநாத், துவாரகை - கிருஷ்ணன், ஒடிசா - ஜெகந்நாதர், உத்திரபிரதேசம் - கிருஷ்ணன் கோவில்கள் போன்ற ஆயிரக்கணக்கான வைணவ தலங்கள் உள்ளன.
இதேபோன்று தான் சூரிய வழிபாடும்!
தமிழகத்தில் ஆடுதுறை சூரியனார் கோவில் முதல், ஒடிசா - கோனார்க் சூரியன் கோவில், கர்நாடகா - சூரியநாராயணசுவாமி ஆலயம், ஐதராபாத் - காக்கிநாடா சூரிய தேவாலயங்கள் போன்று எண்ணற்ற சூரியக்கடவுளுக்கான கோவில்களும் உள்ளன.
எனவே, ஹிந்து கடவுள்களை மொழி, பிராந்திய அடிப்படையில் பிரித்துப் பேசி, ஹிந்துக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்தி, அதில் குளிர்காய நினைக்கும் திருமாவளவன் போன்ற அந்நிய கைக்கூலிகளிடம் ஹிந்துக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்!

