/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உண்மையா உழைச்சா... எப்படியும் மேல வந்துறலாம்
/
உண்மையா உழைச்சா... எப்படியும் மேல வந்துறலாம்
ADDED : ஆக 09, 2025 11:56 PM

''வா ழ்க்கை ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்களை கற்றுத் தரும். ஏராளமான பாதைகள் இருக்கின்றன பயணிக்க,'' என்கிறார், மதுரையை பூர்வீகமாக கொண்ட சுரேஷ்.
இப்போது, பேரூர் தெலுங்குப்பாளையத்தில் வசிக்கிறார். மாலை வேளைகளில் போளி, அதிரசம், ஸ்வீட் பன் ஆகியவற்றை சுடச்சுட தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு ருசிகரமாக அளிப்பது தான் இவரது பணி.
சுந்தராபுரம் காமராஜர் நகர் சந்தையில் இவரை சந்தித்து பேசினோம்...
''மொதல்ல பட்டறையில தான் வேல செஞ்சுட்டு இருந்தேன். அதுல சின்ன சின்ன சிக்கல் வந்துட்டதால, கையில பணப்புழக்கம் குறைஞ்சிருச்சு. அப்புறம், உறவுக்காரரு ஒருத்தரு, பலகாரம் வியாபாரம் செஞ்சுட்டு இருந்தத பாத்துட்டு, நானும் இதுல இறங்கிட்டேன்,''
''அப்படி, இப்படின்னு 21 வருஷம் இதுலேயே ஓடிப்போயிருச்சு. ஜனங்க சாப்பிட்டுட்டு நல்லாயிருக்குன்னு சொல்லும் போது, சந்தோஷம் பிச்சுக்கும். காலையில இருந்து வீட்டுக்காரம்மா, தயார் பண்ணி கொடுக்கறதைதான், சாயங்காலம் வந்து வருமானமா மாத்துறேன்,''
குடும்பத்த நடத்த இந்த வருமானம் போதுமானதா இருக்குங்களா?
மாசம் 30 ஆயிரத்துக்கு மேல சம்பாதிக்குறேன். எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க. ரெண்டு பேரும் காலேஜ்ல படிக்குறாங்க. அவங்கள படிக்கற வைக்கிறது, இந்த வருமானத்துல தான். கொஞ்சம், கொஞ்சமா சேத்து வெச்சு, சொந்த வீடு கட்டிட்டே ன். ரொம்ப நெறைவா இருக்கு. தினமும், ஒவ்வொரு பகுதியில நடக்கற, மாலை நேர சந்தையில தான் என்னோட வியாபாரமே.
முன்னேற ஆசைப்படுறவங்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?
''உண்மையா இருக்கணும்... கடுமையா உழைக்கணும். எதுல இருந்தாலும் முன்னேறலாம்,''