/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரண்டு பஸ் ஸ்டாண்ட்டுகளில் சென்னை ஐ.ஐ.டி., குழு ஆய்வு
/
இரண்டு பஸ் ஸ்டாண்ட்டுகளில் சென்னை ஐ.ஐ.டி., குழு ஆய்வு
இரண்டு பஸ் ஸ்டாண்ட்டுகளில் சென்னை ஐ.ஐ.டி., குழு ஆய்வு
இரண்டு பஸ் ஸ்டாண்ட்டுகளில் சென்னை ஐ.ஐ.டி., குழு ஆய்வு
ADDED : டிச 09, 2024 11:33 PM
கோவை; கோவை காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் மற்றும் உக்கடம் டவுன் பஸ் ஸ்டாண்ட்டை நவீன முறையில் புதுப்பிப்பது தொடர்பாக, சென்னை ஐ.ஐ.டி., குழு நேற்று ஆய்வு செய்தது.
உக்கடம் மேம்பாலப் பணிக்காக, பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்குள் துாண்கள் கட்டப்பட்டு, ஓடுதளம் அமைக்கப்பட்டிருக்கிறது. பயணிகள் ஒதுங்குவதற்கு கூட வசதியில்லை; வெயிலிலும், மழையிலும் அவதிப்படுகின்றனர்.
அதனால், ரூ.21.55 கோடியில் நவீன முறையில் புதுப்பிக்க, மாநகராட்சி முடிவெடுத்திருக்கிறது. உக்கடம் பெரிய குளத்தின் ஒரு பகுதியில் பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. கட்டுமான பணி துவங்கும்போது, நீரூற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
இதேபோல், காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் கட்டி, 50 ஆண்டுகளாகி விட்டது; கட்டடத்தின் உறுதித்தன்மை மோசமாகி விட்டது. ஆங்காங்கே கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுகிறது. இதற்கு தீர்வு காண, ரூ.30 கோடியில் புதுப்பித்துக் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
அடுத்த கட்டமாக, குனியமுத்துார் செங்குளத்தில் முழுக்கொள்ளளவு தண்ணீர் தேக்கினால், அருகாமையில் உள்ள தோட்டங்களில் நீர் ஊற்றெடுக்கிறது; கிணறுகள் நிரம்பி வருகின்றன. அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் நீர்க்கசிவு ஏற்படுகிறது.
இம்மூன்று இடங்களிலும் தொழில்நுட்ப ரீதியாக ஆலோசனை பெற வேண்டியிருந்ததால், சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். பேராசிரியர் தளி நாயுடு தலைமையிலான குழுவினர், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
நில அளவியல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் கட்டட வடிவமைப்பை இறுதி செய்வதற்காக, காந்திபுரம் மற்றும் உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டுகளுக்கு நேரில் சென்று, பார்வையிட்டனர்.

