/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மயானத்தில் குப்பை நிலையம் அமைத்தால் மாநகராட்சிக்கு எதிராக தொடர் போராட்டம் இ.ம.க., - பா.ஜ.,வினர் எச்சரிக்கை
/
மயானத்தில் குப்பை நிலையம் அமைத்தால் மாநகராட்சிக்கு எதிராக தொடர் போராட்டம் இ.ம.க., - பா.ஜ.,வினர் எச்சரிக்கை
மயானத்தில் குப்பை நிலையம் அமைத்தால் மாநகராட்சிக்கு எதிராக தொடர் போராட்டம் இ.ம.க., - பா.ஜ.,வினர் எச்சரிக்கை
மயானத்தில் குப்பை நிலையம் அமைத்தால் மாநகராட்சிக்கு எதிராக தொடர் போராட்டம் இ.ம.க., - பா.ஜ.,வினர் எச்சரிக்கை
ADDED : மே 30, 2025 12:26 AM

கோவை, ; கோவையில், மயான வளாகத்தை ஆக்கிரமித்து குப்பை மாற்று நிலையம் அமைத்தால், மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக, பா.ஜ., - இ.ம.க.,வினர் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
கோவை மாநகராட்சி, 26வது வார்டு பீளமேடு பகுதியில், 2.55 ஏக்கரில் மயானம் உள்ளது. இவ்வளாகத்தில், 55 சென்ட் இடத்தில் குப்பை மாற்று நிலையம் அமைக்க, ஒன்பது கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இத்தகவல் அறிந்ததும் பொதுமக்கள் ஆட்சேபம் தெரிவித்தது. சிங்காநல்லுார் எம்.எல்.ஏ., ஜெயராம், இப்பணியை கைவிட வேண்டுமென, சட்டசபை கூட்டத்தொடரில் பேசினார். அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன், மாமன்ற கூட்டத்தில் பேசியபோது, சலசலப்பு ஏற்பட்டது.
பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, குப்பை மாற்று நிலையம் கட்டும் பணியை, மாநகராட்சி துவக்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீளமேடு உரிமை மீட்புக் குழுவினர் நேற்று மயானத்தில் திரண்டனர். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி உள்ளிட்டோர், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அப்பகுதிக்கு வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. மயானத்தில் பணிகள் செய்தால், தொடர் போராட்டத்தில் இறங்க அப்பகுதி மக்களும், கட்சியினரும் முடிவு செய்துள்ளனர்.
அர்ஜுன் சம்பத் கூறுகையில், ''பீளமேடு, விளாங்குறிச்சி, கணபதி மாநகர் பகுதி மக்கள் நீண்ட காலமாக இந்த மயானத்தையே பயன்படுத்தி வருகின்றனர். சுற்றுப்பகுதியில் காந்தி மாநகர் உட்பட, 42 நகர்கள் உள்ளன.
இந்துக்கள் மயானத்தை ஆக்கிரமித்து குப்பை மாற்று நிலையம் அமைப்பது மிகப்பெரிய அளவில் பிரச்னையை ஏற்படுத்தும். அதையும் மீறி பணிகளைத் தொடர்ந்தால் தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம்,'' என்றார்.
பீளமேடு உரிமை மீட்புக் குழுவினர் கூறுகையில், 'இப்பகுதியில் ஏற்கனவே இரண்டு ஏக்கரில் குப்பை மாற்று நிலையம் உள்ளது. கடந்த, 24ல் இம்மயானத்தில் பொக்லைன் இயந்திரத்தில் தோண்டும்போது நல்லடக்கம் செய்யப்பட்டவர்களின் எலும்புகள் வெளியே வந்தன. இறந்தவர்களை மாநகராட்சி இழிவுபடுத்துகிறது. 28ம் தேதி பணியை துவங்கியபோது எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தப்பட்டன. பணிகளை மீண்டும் துவக்கினால் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவோம்' என்றனர்.