/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதிமுறை மீறும் கனிமவள லாரிகளால் பாதிப்பு : நடவடிக்கை இல்லாததால் மக்கள் அதிருப்தி
/
விதிமுறை மீறும் கனிமவள லாரிகளால் பாதிப்பு : நடவடிக்கை இல்லாததால் மக்கள் அதிருப்தி
விதிமுறை மீறும் கனிமவள லாரிகளால் பாதிப்பு : நடவடிக்கை இல்லாததால் மக்கள் அதிருப்தி
விதிமுறை மீறும் கனிமவள லாரிகளால் பாதிப்பு : நடவடிக்கை இல்லாததால் மக்கள் அதிருப்தி
ADDED : டிச 10, 2025 08:57 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வழியாக கனிமவளங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளில் இருந்து, ஜல்லி கற்கள் சிதறி விழுவதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. நேற்று, ரோட்டில் பரவிய ஜல்லி கற்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், 60 கிரஷர், குவாரிகள் செயல்படுகின்றன. இங்கு, இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
கனிமவளத்துறை அதிகாரிகள் வாயிலாக உரிய அனுமதி கடிதம், குறிப்பிட்ட பாரத்துடன் செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.கனரக வாகனங்களில் கனிமவளம் எடுத்துச் செல்லும் போது, மூடி எடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக, மணல் போன்ற தளர்வான பொருட்கள் மூடப்பட்டு கொண்டு செல்வது மிக அவசியம். சாலை விபத்துகளை தடுக்க இதுபோன்று விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், பொள்ளாச்சி வழியாக, கேரளாவுக்கு ஜல்லி கற்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் விதிகளை பின்பற்றுவதில்லை. மரப்பேட்டை வீதி, தேர்நிலையம், போஸ்ட் ஆபீஸ் மற்றும் ராஜாமில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், ஜல்லிகற்கள், மணல், கழிவு கட்டுமான பொருட்களை சிதறி விழுகின்றன. இதனால், வாகனங்களில் செல்வோர் தடுமாறி விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது.
பொள்ளாச்சி தபால் அலுவலகம் அருகே, லாரியில் இருந்து ஜல்லி கற்கள் சிதறி விழுந்ததால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கவுன்சிலர் சாந்தலிங்கம், துாய்மை பணியாளர்களுடன் இணைந்து ஜல்லி கற்களை அகற்றி துாய்மைப்படுத்தினார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'லாரிகளில் இருந்து ஜல்லி கற்கள் விழுவதும், அதை அகற்றுவதும் தொடர் கதையாகி உள்ளது. இதே நிலை நீடித்தால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி விதிமுறை மீறும் வானகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

