/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புறநகரில் இன்னும் ஓயவில்லை விற்பனை போலீசாரின் அதிரடியில் வேண்டும் கூடுதல் வேகம்
/
புறநகரில் இன்னும் ஓயவில்லை விற்பனை போலீசாரின் அதிரடியில் வேண்டும் கூடுதல் வேகம்
புறநகரில் இன்னும் ஓயவில்லை விற்பனை போலீசாரின் அதிரடியில் வேண்டும் கூடுதல் வேகம்
புறநகரில் இன்னும் ஓயவில்லை விற்பனை போலீசாரின் அதிரடியில் வேண்டும் கூடுதல் வேகம்
ADDED : பிப் 22, 2024 04:51 AM
பெ.நா.பாளையம்: போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை, பறிமுதல் உள்ளிட்டவைகளை மேற்கொண்டாலும், புகையிலைப் பொருட்களின் விற்பனை, கோவை புறநகர் பகுதிகளில் இன்னும் இருந்து வருகிறது. இதை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புகையிலைப் பொருட்களின் விற்பனையை தடை செய்து, மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி, கல்லுாரி வட்டாரங்களில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என, ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தடை சட்டம், ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. புகையிலை பொருட்கள் தயாரித்தல், விற்பனை செய்தல், இருப்பு வைத்தல், கொண்டு செல்லுதல், விற்பனைக்காக காட்சிப்படுத்துதல் ஆகியவற்றுக்கு, தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி, புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், கடந்த ஆண்டு வரை அதிகபட்சமாக, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனாலும், புகையிலை பொருட்கள் விற்பனையை முழுமையாக தடுக்க முடியவில்லை.
இவற்றின் விற்பனையை தடுக்க அபராத தொகை, 5 மடங்கு உயர்த்தப்பட்டு, 25 ஆயிரம் ரூபாய் வசூலிப்பதற்கான சட்ட திருத்தம் கடந்த ஜன., மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது.
இதன்படி, முதன்முறையாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் கடைக்கும், 15 நாட்கள் 'சீல்' வைக்கப்படுகிறது.
இரண்டாவது முறையாக விற்பனை செய்தால் அபராதம், 50 ஆயிரம் ரூபாயும், கடைக்கு, 30 நாட்கள் 'சீல்' வைப்பதுடன், உரிமமும் ரத்து செய்யப்படுகிறது.
மூன்றாவது முறையாக புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம், கடைகளுக்கு, 90 நாட்களுக்கு 'சீல்' வைக்கவும், சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கடுமையான சட்ட திருத்தத்தால் விற்பனையில், 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மட்டுமே குறைந்துள்ளன. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து லாரி, பஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தமிழகத்துக்குள் கொண்டு வரப்படுகின்றன. இருப்பினும், கோவை புறநகர் பகுதிகளில் புகையிலை பொருட்களின் பயன்பாடு இருந்து வருகிறது.
இதுகுறித்து, கோவை மாவட்ட காவல் துறையினர் கூறுகையில், 'இந்த ஆண்டு ஜன., 1 முதல் இதுவரை கோவை மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சோதனைகளில் தடை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 81 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்குக்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு, 94981 81212 எண்ணில் தாராளமாக தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும்' என்றனர்.