/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் நடமாடும் மருத்துவமனை சேவை துவக்கம்: சத்யசாய் சேவா நிறுவனங்கள் அர்ப்பணிப்பு
/
கோவையில் நடமாடும் மருத்துவமனை சேவை துவக்கம்: சத்யசாய் சேவா நிறுவனங்கள் அர்ப்பணிப்பு
கோவையில் நடமாடும் மருத்துவமனை சேவை துவக்கம்: சத்யசாய் சேவா நிறுவனங்கள் அர்ப்பணிப்பு
கோவையில் நடமாடும் மருத்துவமனை சேவை துவக்கம்: சத்யசாய் சேவா நிறுவனங்கள் அர்ப்பணிப்பு
ADDED : பிப் 21, 2024 02:20 AM

கோவை:
ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில், ஸ்ரீ சத்யசாய் நடமாடும் மருத்துவமனை சேவை, நேற்று கோவை மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில், நடமாடும் மருத்துவ சேவை புட்டபர்த்தியில், 2006ம் ஆண்டு பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவால் துவங்கப்பட்டது.
அதன் பின்பு, 2014ல் சென்னையில் துவங்கப்பட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் வளாகத்திலுள்ள, வித்ய பாரதி மஹாலில், நேற்று காலை 11:00 மணிக்கு இந்த சேவை துவங்கியது.
ஸ்ரீ சத்ய சாய் சேவா சென்ட்ரல் டிரஸ்ட் பிரசாந்தி நிலைய நிர்வாக அறங்காவலர் ஆர்.ஜே.ரத்னாகர் கொடியசைத்து, நடமாடும் மருத்துவ சேவையை துவக்கி வைத்தார். மருத்துவ வாகனத்தினுள் உள்ள மருத்துவ வசதிகளை பார்வையிட்டார்.
இதையடுத்து, வித்ய பாரதி மஹாலில் நடந்த நிகழ்ச்சியில் ரத்னாகர் பேசியதாவது:
நாம் சஞ்சலமடைந்திருக்கும் போதும், அமைதி தேவைப்படும் போதும், பிரச்னைகளுக்கான தீர்விற்காகவும் பகவானிடம் செல்கிறோம். மரணம், ஜனனம் எது வந்தாலும் அவரையே அணுகுகிறோம்.
ஏழைகளுக்காக வாழ்வேன், சேவை செய்வேன், ஏழை மக்களுக்காக உயிரையும் விட சித்தமாக இருக்கிறேன் என்று சொன்னார் பகவான் சத்யசாய் பாபா. இந்நிறுவனத்தின் அடித்தளமே அதுதான். அந்த துாய நோக்கம் மற்றும் உணர்வுதான், உலகம் முழுக்க பரந்து விரிந்து உள்ளது.
கடவுளின் சன்னதியில், பகவான் முன்னிலையில் 'நான்' என்பது இல்லை. நம்முடைய அடையாளத்தை துறந்துவிட்டால், பகவானிடம் நாம் நெருக்கமாகிவிடலாம்.
கோவையில் 60 ஆண்டுகளுக்கு முன்பே, இது போன்று நடமாடும் மருத்துவமனையை துவங்கி மருத்துவ சேவையை துவக்கினார் பகவான்.
அதற்கு காரணம், சாய் பக்தர்கள் இதயத்தோடு இதயமாக தொடர்பு கொண்டிருந்தனர். எங்கிருந்து வேண்டுமானாலும் யாரும் தொடர்பு கொள்ள முடியும் என்று சொன்னார் பகவான் சத்யசாய்பாபா.
தெய்வம் எதையும் சார்ந்து இருப்பதில்லை. தெய்வீகம் என்பது தனக்குள்ளேயே ஒளிர்வது. அந்த ஒளி நாம் பார்க்கும் ஒளி. அதனால் தான் நாம் அனைவரும் பார்க்கிறோம். தானே பரவிவிடுகிறது.
அதனால் தான் எங்கோ துாரத்தில் உள்ள, கிராமம் வரையும் பகவான் சென்றடைந்தார். சூரியன் உதிப்பதை அறிவிக்க வேண்டியதில்லை. ஒளியே சொல்லிவிடும்.
அப்படித்தான் சுவாமியின் அன்பும், சேவையும் அனைத்து இடங்களுக்கும் சேர்ந்தது. அவரது நோக்கம் துாய்மையானது. அதுவே, அவர் உலகம் முழுக்க வியாபித்ததற்கு காரணம்.
தனது பக்தர்களுக்காக அனைத்து சிரமங்களையும் சந்தித்தார். தமிழகத்துடன் அவருக்கு சிறந்த தொடர்பு இருந்தது. நாம் எல்லோரும் நம்மால் இயன்ற வரை பணம் இன்றி சேவையாக செய்யலாம்.
வழி தெரியாதவர்களுக்கு, வழி சொல்லுதலும் ஒரு சேவை தான். சிறிய பணியாக இருந்தாலும் சரி; அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யலாம். நல்லதை செய்ய தயங்க வேண்டாம் என்று சொன்னவர் பகவான்.
அமெரிக்காவிலுள்ள பிரசாந்தி டிரஸ்ட், இந்த நடமாடும் மருத்துவ வாகனத்தை வழங்கி உதவியிருக்கிறது. எங்கெல்லாம் நல்ல பணி நடக்கிறதோ, அங்கெல்லாம் மக்கள் கவர்ந்திழுக்கப்படுவர்.
நேர்மை, உண்மை, தன்னலமின்மைக்கு அடையாளம் தான் சத்யசாய் சேவா நிறுவனங்கள். அதனால்தான் இந்த நிறுவனத்தில் மக்கள் சேருகின்றனர். இந்த தெய்வீக பயணத்தில் அனைவரும் இணைவோம்.
இந்த பணியை செய்து கொண்டே இருப்பதால், பகவானுக்கு அருகே நாம் சென்று கொண்டே இருப்போம். ஏராளமான அன்பு, அமைதி, வளமை, நிறை சேவை ஆகியவற்றை செய்வோம்; சுவாமி ஆசிர்வதிப்பார்.
இவ்வாறு, அவர் பேசினார்.

