
1. சாலையோரம் குவியும் குப்பை
ராம்நகர், ராமச்சந்திரன் லே-அவுட் பகுதியில், சாலையோரம் சிலர் தினமும் குப்பையை வீசிச்செல்கின்றனர். குப்பை ஆங்காங்கே காற்றில் பறந்து தெருவெங்கும் சிதறிக்கிடக்கிறது. பல வாரங்களாக கழிவுகளை அகற்ற சொல்லியும் நடவடிக்கையில்லை. இப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.
- சந்திரன், ராம்நகர்.
மிரட்டும் நாய்கள்
சிங்காநல்லுார், வசந்த் நகர், தசமி பார்க் ரெசிடன்சி செல்லும் வழியில் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோரையும், பைக்கில் செல்வோரையும் நாய்கள் துரத்துகின்றன. பொதுமக்கள் இவ்வழியே செல்வதற்கே மிகவும் அச்சமடைகின்றனர்.
- நிகில், வசந்த் நகர்.
2. கழிவுநீர் கலக்கும் அபாயம்
உப்பிலிபாளையம், 60வது வார்டு, வரதராஜபுரம் பிரதான சாலையின் பின்புறம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகிலேயே ரெடிமேட் ரிங் கொண்டு கழிவுநீர் தொட்டியை அமைத்துள்ளனர். கழிவுநீர் கலக்க வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை வேண்டும்.
- மங்கையர்கரசி, வரதராஜபுரம்.
3. வீதியில் கழிவுநீர் தேக்கம்
கணபதி, ஆர்.கே.,புரம், கிருஷ்ணா திருமண மண்பம், 19வது வார்டு, சைட் நம்பர் ஐந்தில் சாக்கடை கால்வாய் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றமும், கொசுதொல்லையும் அதிகமாக உள்ளது. கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- சக்திவேல், கணபதி.
4. மலைபோல் குவிந்துள்ள குப்பை
சவுரிபாளையம், 51வது வார்டு, ராஜீவ் காந்தி நகரில் மலைபோல மரக்கழிவுகள் குவிந்துள்ளது. முறிந்து விழுந்த மரத்தின் கிளைகள், காய்ந்த இலைகள் என பெருமளவு குப்பை தேங்கியுள்ளது. போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பனிமலர், சவுரிபாளையம்.
தடுமாறும் வாகன ஓட்டிகள்
சுந்தராபுரம் முதல் மதுக்கரை மார்க்கெட் ரோடு வரை சமீபத்தில் சாலை விரிவுபடுத்தப்பட்டது. இதில், பாதாள சாக்கடை மூடிகள் சாலையை விடவும் உயரமாக உள்ளது. வாகனங்கள் செல்லும் போது தட்டுத்தடுமாறி செல்கின்றன. இரவு நேரத்தில் இந்த மேடுகள் தெரியாமல் விபத்துகள் நடக்கிறது.
- சுசீலா, சுந்தராபுரம்.
5. சாலையை சீரமைக்கணும்
பொம்மணாம்பாளையம், பாலாஜி நகரில், பாதாள சாக்கடை பணிகளுக்கு தோண்டிய சாலையை சீரமைக்கவில்லை. குழிகளாக இருக்கும் மண் சாலையில் வாகனங்களை இயக்கவே முடியவில்லை. நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் விபத்திற்குள்ளாகின்றனர். விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும்.
- விஜயகுமார், பாலாஜி நகர்.
6. பள்ளத்தால் அடிக்கடி விபத்து
பாப்பநாயக்கன்புதுார், முல்லை நகர் போலீஸ் சோதனைச் சாவடி எதிரே மருதமலை மெயின் ரோட்டையும், சிறுவாணி ரோட்டையும் இணைக்கும் பழைய பாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சாலை மோசமாக சேதமடைந்துள்ளது. சாலையின் ஆரம்பத்தில் அபாயகரமான பள்ளம் உள்ளது. அடிக்கடி விபத்துகள் நடப்பதால் பள்ளத்தை தார் கொண்டு மூட வேண்டும்.
- வெங்கடேஸ்வரன், பாரதிநகர்.
7. விளம்பர பலகையால் இடையூறு
நரசிம்மநாயக்கன்பாளையம் - மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில், நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில், அதிகளவு கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இதில், கூடுதலாக விளம்பர பலகையும் வைக்கப்பட்டுள்ளது. வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும்.
- மணி, நரசிம்ம நாயக்கன்பாளையம்.
8. இடிந்த சாக்கடை
காந்திபும், 68வது வார்டு, எட்டாவது வீதியில், சாக்கடை கால்வாயை சத்தம் செய்வதற்கு சிலாப் அகற்றப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை சிலாப் மூடவில்லை. சாக்கடை கால்வாயின் ஒரங்களும் இடிந்து, குப்பை அடைத்து நிற்கிறது. இதனால், கழிவுநீர் தேங்கி அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- சீனிவாசன், காந்திபுரம்.