/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிதி இல்லாத சங்கங்களால் ஊக்கத்தொகை கிடைக்கவில்லை
/
நிதி இல்லாத சங்கங்களால் ஊக்கத்தொகை கிடைக்கவில்லை
ADDED : மார் 18, 2024 10:55 PM
அன்னூர்;தமிழகத்தில் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் மற்றும் எருமைப் பாலுக்கு ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த டிச., 18ம் தேதி அறிவித்தது.
இதன்படி ஜன., 31ம் தேதி வரை பாலுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதன் பிறகு 47 நாட்கள் ஆகியும் இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. கடந்த 14ம் தேதி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் இயக்குனர் வினித் பிறப்பித்த உத்தரவில், 'நிதி வசதி உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், தங்கள் சொந்த நிதியிலிருந்து பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்க வேண்டும்,' என தெரிவித்தார்.
இதையடுத்து பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 75 சதவீதம் பால் உற்பத்தியாளர்களுக்கு, நிதி வசதி உள்ள சங்கங்கள் பணம் வழங்க உரிய உத்தரவு பிறப்பித்து விட்டன. ஆனால் 25 சதவீதம் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகைக்கான உத்தரவு இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.
பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'அரசு விரைவில் நிதி ஒதுக்கி 47 நாட்கள் வழங்கிய பாலுக்கான ஊக்க தொகையை உடனே வழங்க வேண்டும்,'என்றனர்.

