/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வருமான வரிச் சட்டம் - 2025 எல்லோருக்கும் எளிதில் புரியும்'
/
'வருமான வரிச் சட்டம் - 2025 எல்லோருக்கும் எளிதில் புரியும்'
'வருமான வரிச் சட்டம் - 2025 எல்லோருக்கும் எளிதில் புரியும்'
'வருமான வரிச் சட்டம் - 2025 எல்லோருக்கும் எளிதில் புரியும்'
ADDED : நவ 21, 2025 07:02 AM

கோவை: எல்லோருக்கும் எளிதில் புரியும்படி இருக்க வேண்டும் என்பதற்காகவே 'வருவான வரிச் சட்டம் 2025' கொண்டு வரப்பட்டுள்ளது என, இச்சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்த வி.கே., குப்தா தெரிவித்தார்.
வரும் 2026 ஏப்., 1ம் தேதி முதல் 'வருமான வரிச் சட்டம் 2025' அமலுக்கு வருகிறது. புதிய சட்டவிதிகள், நடைமுறைகள் குறித்து, மத்திய நேரடி வரி வாரியம் சார்பில், வருமான வரித்துறை உயரதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
உயரதிகாரிகளுக்கு முதலில் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் வாயிலாக அடுத்தடுத்த நிலையில் பயிற்சிகளை வழங்கி, வரும் மார்ச் மாதத்துக்குள் எல்லாத்தரப்பினருக்கும் பயிற்சியை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கோவாஆகிய மாநில வருமான வரித்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி, கோவையில் நேற்று நடந்தது.
பயிற்சிக்கு, வருமான வரித்துறை முன்னாள் முதன்மை தலைமை கமிஷனரும், இச்சட்ட வரைவுக்குழுவின் தலைவருமான வி.கே. குப்தா தலைமை வகித்தார். வருமான வரித்துறை துணைக் கமிஷனர்கள் முதல், முதன்மை கமிஷனர்கள் வரை 85 அதிகாரிகள் பயிற்சியில் பங்கேற்றனர்.
நாக்பூரில், வருமான வரித்துறை தலைமை இயக்குநர் (பயிற்சி) சிபிச்சென் மாத்யூ, மேல்முறையீட்டு தீர்ப்பாய உறுப்பினர் ஜி.எம். தாஸ், வருமான வரி தலைமை கமிஷனர் அனுராக் சஹாய் ஆகியோர் பங்கேற்று, வருமான வரிச் சட்டம் 2025 குறித்து பயிற்சி மற்றும் அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.
வருமான வரிச்சட்டம் 2025 சட்ட வரைவுக் குழு தலைவர் வி.கே.குப்தா 'தினமலர்' நாளிதழிடம் பகிர்ந்து கொண்டதாவது: நடைமுறையில் இருக்கும் வருமான வரிச்சட்டம் சற்று சிக்கலானது. அனைவராலும் புரிந்து கொள்வது கடினம். பட்டயக் கணக்காளர்களால் மட்டுமே கடினமாக புரிந்து கொள்ள முடியும். எனவே, ஏராளமான பிரிவுகளை சுருக்கி, ஒன்றிணைத்து, எளிமையாக இச்சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை புதிய சட்டம் என்று கூறத் தேவையில்லை; 'வருமான வரிச்சட்டம் 2025' அவ்வளவுதான்.
வரி நிபுணர்கள் மட்டுமல்லாது அனைவரும் மிக எளிதில் படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இச்சட்டம் சீரமைக்கப்பட்டுள்ளது. எல்லோராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். பயிற்சியில், நேரடி வருவாய் தேசிய அகாடமி, சென்னை மண்டல துணைத் தலைமை இயக்குநர் பழனிக்குமார், கோவை மண்டல வருமான வரித்துறை தலைமை கமிஷனர் அருண் பரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

