/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாட்டு கோழி வளர்ப்பால் பழங்குடியினருக்கு வருவாய்
/
நாட்டு கோழி வளர்ப்பால் பழங்குடியினருக்கு வருவாய்
ADDED : ஜன 18, 2024 12:13 AM
பொள்ளாச்சி : மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பலர், நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டி, வருவாய் ஈட்டி வருகின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை, உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இந்த வனப்பகுதியில், பழங்குடியினர் வசிக்கும், 36 செட்டில்மென்ட் பகுதிகள் உள்ளன.
பெரும்பாலானவர்கள் காடர், எரவாளர், புலையர், முதுவர், மலைமலசர் மற்றும் மலசர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். புலிகள் பாதுகாப்பு சட்டம் காரணமாக, அங்குள்ள குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள், செய்து தரபப்படாத நிலை உள்ளது.
இருப்பினும், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தார் சாலை, மின் இணைப்பு நீங்கலாக, இதர அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன. இதுமட்டுமின்றி, சிறு வனப்பொருட்கள் சேகரிப்புக்கு தடையுள்ளதால், செட்டில்மென்ட் அடுத்த நிலப்பகுதியிலேயே, விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சில செட்டில்மென்ட் பகுதிகளில் உள்ள மக்கள், கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில், நாட்டுக் கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர்.
கால்நடைத்துறையினர் கூறுகையில், 'செட்டில்மென்ட் பகுதிகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள், நகரில் உள்ள இறைச்சிக் கடைகளுக்கு விற்பனைக்காக தருவிக்கப்படுகிறது. தானியங்களை மட்டுமே அவை உட்கொள்வதால், இறைச்சியின் சுவை கூடுதலாக உள்ளது.
மக்கள் பலரும், செட்டில்மென்ட் பகுதிகளில் வளர்த்த நாட்டுக் கோழிகளையே கேட்டு வாங்கிச் செல்கின்றனர். இதனால், பழங்குடியின மக்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது,' என்றனர்.