sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நிறைவு பெறாத மேற்கு புறவழிச்சாலை பணி; விடியல் கிடைக்காமல் திண்டாடும் மக்கள்

/

நிறைவு பெறாத மேற்கு புறவழிச்சாலை பணி; விடியல் கிடைக்காமல் திண்டாடும் மக்கள்

நிறைவு பெறாத மேற்கு புறவழிச்சாலை பணி; விடியல் கிடைக்காமல் திண்டாடும் மக்கள்

நிறைவு பெறாத மேற்கு புறவழிச்சாலை பணி; விடியல் கிடைக்காமல் திண்டாடும் மக்கள்


ADDED : செப் 20, 2024 10:11 PM

Google News

ADDED : செப் 20, 2024 10:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகள் துவங்கி, மூன்று ஆண்டுகளாகியும் பணிகள் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், வழித்தடத்திலுள்ள கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.

பொள்ளாச்சி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், கேரள மாநிலத்தில் இருந்து வருவோர், பொள்ளாச்சி நகருக்குள் வராமல், கோவை மார்க்கமாக செல்லும் வகையில், மேற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த சாலை, கோவை ரோடு ஆச்சிப்பட்டி சக்தி மில் அருகே துவங்கி, ஆ.சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, நல்லுார் வழியாக, ஜமீன் ஊத்துக்குளி கைகாட்டி வரை, 8.9 கி.மீ., துாரத்துக்கு, 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது.

ரோட்டின் இருபக்கமும், மூன்று மீட்டர் அகலத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. இந்த புறவழிச்சாலை பணிக்காக, விவசாயிகள் உள்ளிட்ட தனியாரிடம் இருந்து, 34,718 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

மொத்தம், 73.35 கோடி ரூபாய் நிதியில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த, 2021ம் ஆண்டு திட்டப்பணிகள் துவங்கி, நான்கு மாதங்கள் சுறுசுறுப்பாக நடந்தது.அதன்பின், பணிகள் மந்தமாக நடக்கிறது. ஒரு சில மாதங்கள் பணிகள் விறு, விறுப்பாகவும், அதன்பின் கிடப்பில் போடுவதுமாக உள்ளது.

மரங்கள் அகற்றம்


இப்பணிக்காக, 171 மரங்கள் வெட்டப்பட்டன. மேலும், ஜமீன் ஊத்துக்குளியில் இருந்து கோவை ரோடு ஆ. சங்கம்பாளையம் வரை, நான்கு கி.மீ., துாரத்துக்கு பழைய குழாய்களுக்கு மாற்றாக, ஐந்து கோடி ரூபாய் செலவில் புதிய குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், மீண்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

மக்கள் அவதி


இப்பணிக்காக ரோடுகள் தோண்டப்பட்டன. அதில், ஆர். பொன்னாபுரம் செல்லும் ரோடு, வடக்கிபாளையம் பிரிவில் இருந்து தோண்டப்பட்டு, ஜல்லி கற்கள் பரப்பி விடப்பட்டன. அதன்பின், ரோடு போடாமல் அப்படியே விடப்பட்டுள்ளதால், வாகனங்களில் செல்வோர் தாடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். இவ்வழியாக செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பள்ளி வாகனங்கள் இவ்வழியாக வர மறுப்பதால், மாணவர்கள் ஆர். பொன்னாபுரம் பிரிவுக்கு நடந்து சென்று பள்ளி வாகனங்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. மற்ற வாகனங்களும் தடுமாறி செல்லும் நிலை உள்ளதால், அடிக்கடி பழுதாகின்றன.

முதியவர்கள், கர்ப்பிணிகள் என அனைவரும் மிகுந்த சிரமப்படுகின்றனர். ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளம் செல்லும் ரோடும், குண்டும், குழியுமாக விபத்துக்கு அச்சாரம் போடுகிறது.

திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறித்து, விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். பொதுமக்கள், விவசாயிகள் முறையீட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அனைத்து தரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர்.

இரண்டு மாதங்களாகும்!


நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) அதிகாரிகள் கூறுகையில், 'மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்தவருக்கு மாற்றாக, புதிய நபருக்கு ஒப்பந்தம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும், இரண்டு மாதங்களில் இப்பணிகள் துவங்கப்பட்டு விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

பஸ்கள் வருவதில்லை!

பரமசிவம், ஆர்.பொன்னாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர்: பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை திட்டம் துவங்கி இதுவரை நிறைவு செய்யப்படாமல் உள்ளது. இது குறித்து, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசினேன். ரோடு போடாததால், ஊருக்குள் எந்த பஸ்களும் வருவதில்லை. தற்போது மற்ற வாகனங்களும் சென்று வர இயலாத நிலைக்கு ரோடு மாறியுள்ளது. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.அதற்கு, 'டெண்டர் எடுத்தவர் வேலை செய்ய முடியாது என சென்று விட்டார். புதிதாக டெண்டர் விடப்பட்டு, இரண்டு மாதத்தில் பணிகள் துவங்கும்,' என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.ஆனால், இதுவரை பணிகள் துவங்காததால் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். பணிகளை விரைந்து துவங்கி நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us