/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவுசார் மையத்தில் அறிவாளிகள் அதிகரிப்பு; அமரத்தான் இடமில்லை
/
அறிவுசார் மையத்தில் அறிவாளிகள் அதிகரிப்பு; அமரத்தான் இடமில்லை
அறிவுசார் மையத்தில் அறிவாளிகள் அதிகரிப்பு; அமரத்தான் இடமில்லை
அறிவுசார் மையத்தில் அறிவாளிகள் அதிகரிப்பு; அமரத்தான் இடமில்லை
ADDED : ஏப் 04, 2025 11:51 PM

கோவை; கோவையில் அறிவுசார் மையத்துக்கு படிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இடம் இல்லாமல் நுாலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர்.
கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், போட்டித் தேர்வுக்கு படிக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில், கோவை ஆடீஸ் வீதியில், 7800 சதுரடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட நவீன வசதிகளுடன் நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு தினமும் படிக்க வரும் போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இடம் இல்லாமல் நுாலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர். இந்த நுாலகத்தின் மேல் தளத்தில் உள்ள காலி இடத்தில், கூடுதலாக வாசிப்பு அறை கட்டி தரவேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பீளமேட்டை சேர்ந்த பாலகணேசன் கூறுகையில்,''இங்கு அமர்ந்து படிக்க இடம் போதவில்லை. மின் விசிறிகள் குறைவாக உள்ளன. குடிநீர் வசதியில்லை. நாங்கள் கொண்டு வரும் பேக் மற்றும் பொருட்களை பாதுகாப்பாக வைக்க, ரேக்குகள் இல்லை. இதை எல்லாம் நுாலகத்துறை செய்து கொடுக்க வேண்டும்,'' என்றார்.
மாநகராட்சி உதவி கமிஷனர் செந்தில்குமரன் கூறியதாவது: புதிய நுால்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது; வந்துவிடும். தன்னார்வ அமைப்புகள் முன் வந்து புத்தகங்களை நன்கொடையாக கொடுக்கின்றனர். போட்டி தேர்வர்கள் தேவையான நுால்களை அவர்களே கொண்டு வந்து படிக்க, அனுமதி கொடுத்து இருக்கிறோம். முதல் தளத்தில் காலியாக உள்ள இடத்தில், ெஷட் அமைத்து ஹால் உருவாக்க இருக்கிறோம். அதில், 50 பேருக்கு மேல் அமர்ந்து படிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

