/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுதானிய உற்பத்தியை பெருக்குங்கள்! விவசாயிகளுக்கு அழைப்பு
/
சிறுதானிய உற்பத்தியை பெருக்குங்கள்! விவசாயிகளுக்கு அழைப்பு
சிறுதானிய உற்பத்தியை பெருக்குங்கள்! விவசாயிகளுக்கு அழைப்பு
சிறுதானிய உற்பத்தியை பெருக்குங்கள்! விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : மே 26, 2025 04:51 AM
பொள்ளாச்சி; கோவை மாவட்டத்தில், சிறுதானிய உற்பத்தியை பெருக்க, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் செயல்படுத்த உள்ள நிலையில் அனைத்து விவசாயிளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி அறிக்கை: தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் 2025--26ம் ஆண்டில், வேளாண் நிதி நிலை அறிக்கையில், 26 மாவட்டங்களை உள்ளடக்கி, இரு சிறுதானிய மண்டலம் அறிவிக்கப்பட்டது. இதில், கோவை மாவட்டம் சிறுதானிய சிறப்பு மண்டலம் 1ல் உள்ளது.
அவ்வகையில், குதிரைவாலி, கேழ்வரகு, திணை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் போன்றவை சிறுதானிய வகைகளாகும். சிறுதானியங்களில் நார்சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகள் அதிகமாக காணப்படுவதால், அவற்றை உட்கொள்ளும் போது, உடல் ஆரோக்கியம் பெறுகிறது.
சிறுதானியங்களில், பல மருத்துவ குணம் கொண்ட நுண்ணுயிர் எதிர்ப்பு வேதிப்பொருட்களும் உள்ளது. இதில் உள்ள மாவுச்சத்து மெதுவாக செரிமானமாவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும். எனவே, கோவை மாவட்டத்தில், சிறுதானிய உற்பத்தியை பெருக்க, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, உழவர் குழுக்கள் அமைத்தல், மாற்றுப்பயிர் சாகுபடி திட்டம் ஆகிய இனங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அனைத்து விவசாயிகளும் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் கீழ் பயன் பெறத் தகுதியுடையவராவர். அனைத்து விவசாயிகளுக்கும், 50 சதவீத மானியம் வழங்கப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த இயக்கத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு மேற்கொள்ள வேண்டும்.
நடப்பாண்டு, மாற்றுப்பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ், சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிக்க, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, ஒரு ஏக்கருக்கு 1,250 ரூபாய் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற வட்டார வேளாண் விரிவாக்க மையத்தினை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.