/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பனிப்பொழிவு அதிகரிப்பு: கருகும் தேயிலை செடிகள்
/
பனிப்பொழிவு அதிகரிப்பு: கருகும் தேயிலை செடிகள்
ADDED : டிச 15, 2025 05:25 AM

வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவால், தேயிலை செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வால்பாறை மலைப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் அக்., மாதம் வரை ஐந்து மாதங்களாக தென்மேற்குப்பருவ மழை தொடர்ந்து பெய்ததால், தேயிலைச்செடிகள் துளிர்விட முடியாமல் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
கடந்த அக். மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், இடையிடையே வெயில் நிலவுவதால், தேயிலை செடிகள் துளிர்விட்டு உற்பத்தியும் அதிகரித்தது.இந்நிலையில், கடந்த மாதம் இறுதியில் இருந்து, கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.
காலை, மாலை நேரங்களில் நிலவும் பனிப்பொழிவால் தேயிலைச்செடிகள் துளிர்விடாமல், கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டதோடு, தற்காலிக தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.
தோட்ட அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த பருவமழையினால், தேயிலைச்செடிகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைத்துள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுவதால், தேயிலை செடிகள் துளிர்விட முடியாமல் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பனியின் தாக்கம் குறைந்த பின், ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலகட்டங்களில் தேயிலை உற்பத்தி அதிகரிக்க அதிக அளவில் வாய்ப்புள்ளது.
இவ்வாறு, கூறினர்.

