/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு வழிச்சாலையில் அதிகரிக்கும் விபத்து; நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு
/
நான்கு வழிச்சாலையில் அதிகரிக்கும் விபத்து; நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு
நான்கு வழிச்சாலையில் அதிகரிக்கும் விபத்து; நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு
நான்கு வழிச்சாலையில் அதிகரிக்கும் விபத்து; நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு
ADDED : நவ 17, 2024 09:56 PM

பொள்ளாச்சி ; மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை, 4.5 கி.மீ., துாரத்துக்கு, ஆறு வழிச்சாலையாக மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி, மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை, 4.5 கி.மீ., துாரத்துக்கு, நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாலையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க, இரும்புத்தகடு சென்டர்மீடியன், சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த சாலையில், அடிக்கடி விபத்து ஏற்படும் சூழலில், சின்னாம்பாளையம், சோழபாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, மாக்கினாம்பட்டி ஊராட்சி உள்ளாட்சி பிரநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து, சர்வீஸ் ரோடு ஒட்டிய, இரு புறங்களிலும் உள்ள பக்கவாட்டு இரும்புத்தடுப்பு அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, சப் - கலெக்டரிடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரையிலான சாலை போதிய அகலம் இல்லாமலும், பக்கவாட்டின் இரு புறங்களிலும், இரும்பு தடுப்புகள் மற்றும் சிமென்ட் திட்டு போடப்பட்டுள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகரிக்கிறது.
பக்கவாட்டு தடுப்பை அகற்ற வேண்டும். இது தொடர்பாக, கிராம சபை கூட்டங்களிலும், தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. துறை ரீதியான அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, பக்கவாட்டு தடுப்பை அகற்றி, ஆக்கிரமிப்புகளை நீக்கி, சாலையை தேவைக்கேற்ப விரிவாக்கம் செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எம்.பி., ஈஸ்வரசாமி, சப்கலெக்டர் கேத்தரின்சரண்யா, நெடுஞ்சாலைத்துறை, போலீசார் அடங்கிய குழுவினர், மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி இடையிலான சாலையை ஆய்வு செய்தனர்.
பின்னர், நிருபர்களிடம் எம்.பி., கூறுகையில், ''சர்வீஸ் ரோட்டுடன், இருவழியாக அமைக்கப்பட்டுள்ள சாலை போதிய அகலமின்றி உள்ளது. இதனால், வாகனங்கள் முந்திச் செல்ல முற்படுகையில், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. சர்வீஸ் ரோடு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், மக்கள் கோரிக்கையை ஏற்று, ஆய்வு செய்யப்பட்டது. ஆறு வழிச்சாலையாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.